இபோலா பாதிப்பு: அமெரிக்கர்களைக் கென்யாவில் தனிமைப்படுத்த திட்டம்

இபோலா பாதிப்பு: அமெரிக்கர்களைக் கென்யாவில் தனிமைப்படுத்த திட்டம்

2 mins read
83794995-6afa-4e65-a1b4-f37a8fa6af7c
கென்யாவின் ‘லாய்கிபியா’ ஆகாயப்படைத் தளத்தில் கிருமித்தொற்று ஏற்படும் அபாயம் அதிகம் உள்ள, ஆனால் இதுவரை அதற்கான அறிகுறிகள் எதுவும் வெளியில் தெரியாத அமெரிக்கர்களுக்காகச் சுகாதார மையம் அமைக்கப்பட்டுள்ளது. - படம்: ராய்ட்டர்ஸ்

வாஷிங்டன்: ஆப்பிரிக்க நாடுகளில் இபோலா கிருமி பரவிவரும் சூழலில், அங்கு பாதிப்புக்கு ஆளாகும் அல்லது பாதிக்கப்பட வாய்ப்புள்ள அமெரிக்கக் குடிமக்களை மீண்டும் அமெரிக்காவிற்கு அழைத்து வராமல், ஆப்பிரிக்க நாடான கென்யாவிலேயே தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

அதற்காக, கென்யாவில் ஒரு புதிய தற்காலிக தனிமைப்படுத்தல் சிகிச்சை மையம் ஒன்றை அமைக்க அமெரிக்கா திட்டமிட்டு வருவதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தற்போது, காங்கோ ஜனநாயகக் குடியரசு, உகாண்டா ஆகிய நாடுகளில் மிக அரிய வகை ‘புந்திபுகியோ’ இபோலா கிருமி வேகமாகப் பரவிவருகிறது. 

உலகச் சுகாதார நிறுவனம் அதனைக் கவலைதரும் அனைத்துலகப் பொதுச் சுகாதார அவசரநிலையாக அறிவித்துள்ளது. காங்கோவில் தற்போதுவரை ஏறத்தாழ 1,000 பேருக்கு இபோலா பாதிப்பு இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படும் வேளையில், 220க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

இந்த ஆபத்தான சூழலில் ஆப்பிரிக்கப் வட்டாரத்தில் பணியாற்றும் அமெரிக்கப் பொதுச் சுகாதாரப் பணியாளர்களும் அங்குள்ள அமெரிக்கர்கள் இபோலா தொற்றால் பாதிக்கப்பட்டால், அவர்களைப் பல மணி நேரம் விமானத்தில் ஏற்றி அமெரிக்காவிற்கு அழைத்துச் செல்வதைத் தவிர்க்கவே அந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 

இதன்மூலம் அவர்களுக்கு மிக விரைவாகவும் அருகிலேயும் அவசர சிகிச்சை அளிக்க முடியும் என்று அமெரிக்க அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், இந்தப் புதிய கொள்கை, மருத்துவ வல்லுநர்களுக்கும் முன்னாள் சுகாதார அதிகாரிகளுக்கும் இடையே பெரிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு முன்பு 2014-2015ஆம் ஆண்டு காலக்கட்டத்தில் ஏற்பட்ட இபோலா பரவலின்போது, பாதிக்கப்பட்ட அமெரிக்கர்கள் தாய்நாட்டிற்கு அழைத்து வரப்பட்டு அங்குள்ள அதிநவீன தனிமைப்படுத்தப்பட்ட மருத்துவமனைகளில் குணப்படுத்தப்பட்டனர். 

தற்போதைய முடிவானது அமெரிக்கக் குடிமக்களுக்கு அரசு செய்யவேண்டிய கடமையிலிருந்து பின்வாங்குவது போல் உள்ளது என்று சிலர் விமர்சித்துள்ளனர்.

குறிப்புச் சொற்கள்