வாஷிங்டன்: ஆப்பிரிக்க நாடுகளில் இபோலா கிருமி பரவி வரும் சூழலில், அங்குப் பாதிப்புக்கு ஆளாகும் அல்லது பாதிக்கப்பட சாத்தியமுள்ள அமெரிக்கக் குடிமக்களை மீண்டும் அமெரிக்காவிற்கு அழைத்து வராமல், ஆப்பிரிக்க நாடான கென்யாவிலேயே தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
அதற்காக, அமெரிக்கா கென்யாவில் ஒரு புதிய தற்காலிக தனிமைப்படுத்தல் சிகிச்சை மையம் ஒன்றை அமைக்கத் திட்டமிட்டு வருவதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தற்போது காங்கோ ஜனநாயகக் குடியரசு, உகாண்டா ஆகிய நாடுகளில் மிக அரிய வகை ‘பூண்டிபூஜோ’ இபோலா கிருமி வேகமாகப் பரவி வருகிறது.
உலக சுகாதார அமைப்பு இதனை அனைத்துலக அளவில் கவலை ஏற்படுத்தக்கூடிய பொதுச் சுகாதார அவசரநிலையாக அறிவித்துள்ளது. காங்கோவில் தற்போது வரை ஏறத்தாழ 1,000 பேருக்கு இபோலா பாதிப்பு இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படும் வேளையில், 220க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இந்த ஆபத்தான சூழலில் ஆப்பிரிக்கப் வட்டாரத்தில் பணியாற்றும் அமெரிக்கப் பொதுச் சுகாதாரப் பணியாளர்களும் அங்குள்ள அமெரிக்கர்களும் இபோலா தொற்றால் பாதிக்கப்பட்டால், அவர்களைப் பல மணி நேரம் விமானத்தில் ஏற்றி அமெரிக்காவிற்கு அழைத்துச் செல்வதைத் தவிர்க்கவே அந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் அவர்களுக்கு மிக விரைவாகவும், அருகிலேயே அவசர சிகிச்சை அளிக்க முடியும் என்று அமெரிக்க அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், இந்தப் புதிய கொள்கை மருத்துவ வல்லுநர்களுக்கும் முன்னாள் சுகாதார அதிகாரிகளுக்கும் இடையே பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு முன்பு 2014-2015ஆம் ஆண்டு காலக்கட்டத்தில் ஏற்பட்ட இபோலா பரவலின் போது, பாதிக்கப்பட்ட அமெரிக்கர்கள் தாய்நாட்டிற்கு அழைத்து வரப்பட்டு அங்குள்ள அதிநவீன தனிமைப்படுத்தப்பட்ட மருத்துவமனைகளில் குணப்படுத்தப்பட்டனர்.

