ஜெனீவா: மத்திய ஆப்பிரிக்க நாடுகளை வதைத்துவரும் இபோலா தொற்று, தணிவதைப்போல தோன்றவில்லை.
சனிக்கிழமை (ஜூன் 6) நிலவரப்படி, ஏறத்தாழ 500 பேருக்கு இபோலா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்தது. அந்த எண்ணிக்கை மேலும் மோசமடையும் என்று நிறுவனம் அச்சமடைந்துள்ளது.
நாள்தோறும் வெளியிடப்படும் உலக சுகாதார நிறுவனத் தரவுகளின்படி, காங்கோ ஜனநாயகக் குடியரசில் மட்டும் 452 நோயாளிகளில் 82 நபர்கள் மரணமடைந்துவிட்டனர். மூன்று வாரங்களுக்கு முன்பு அங்கு தொற்று கண்டறியப்பட்டது.
அண்டை நாடான உகாண்டாவில் 19 நோயாளிகள் உறுதி செய்யப்பட்டனர். அவர்களில் இருவர் மரணமடைந்துவிட்டனர்.
இதுவரையிலான மொத்த எண்ணிக்கையில் ஒரே நாளில் காங்கோவிலும் உகாண்டாவிலும் 100 நோயாளிகளுக்குத் தொற்று பரவி, அவர்களில் இருபது நபர்கள் உயிரிழந்துள்ளனர்.
அனைத்துலக அளவில் பொதுச் சுகாதார அவசர நிலையை உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ள நிலையில் இந்த எண்ணிக்கை உயர்ந்து வருகிறது
தொற்று பரவும் அபாயம்
சுகாதார அமைப்புகள் பொதுமக்களிடம் முன்னின்று தொற்றினைக் கட்டுப்படுத்தாவிட்டால், இபோலா தொற்று பெருமளவில் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க தொற்றுநோய் தடுப்பு, கட்டுப்பாட்டு நிலையத்தின் மூத்த அதிகாரி எச்சரித்தார்.
மேற்கு ஆப்பிரிக்காவில் 2014ஆம் ஆண்டில் 28,000 பேருக்குமேல் இபோலா நோய் தொற்றி 11,000க்கும் அதிக மரணங்கள் அப்போது ஏற்பட்டது. அதனை நினைவுகூர்ந்து, தற்போதைய நிலை அதனை மிஞ்சும் அளவுக்கு அபாயம் அதிகரித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

