சோல்: அமெரிக்காவுடனான 2025ஆம் ஆண்டின் வரி தொடர்பான பேச்சுவார்த்தை உள்ளிட்ட முக்கிய வர்த்தக விவகாரங்களில் முக்கியப் பங்காற்றிய தென்கொரியாவின் தலைமை வர்த்தகப் பேச்சாளரான யோ ஹான் கூ பதவிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
வர்த்தக, தொழில் மற்றும் எரிசக்தி அமைச்சின் வர்த்தக அமைச்சராகப் பதவி வகித்த யோ ஹான் கூவை ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதியன்று தென்கொரிய அதிபர் லீ ஜே மியுங் பதவியிலிருந்து நீக்கியுள்ளார்.
ஓர் அதிகாரியைத் தன்னிச்சையாகப் பதவியிலிருந்து நீக்கும் நிர்வாக நடவடிக்கை மூலம் அவர் மக்கள் பதவியிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டது மிகவும் அரிதான ஒன்றாகக் கருதப்படுகிறது. இருப்பினும், இந்தத் திடீர் முடிவுக்கான குறிப்பிட்ட காரணத்தை அரசாங்கம் வெளியிடவில்லை.
அரசியல் நியமனங்கள் தொடர்பான அதிகாரிகள் மாற்றங்கள், நியமன அதிகாரியின் அதிகாரம் மற்றும் அரசியல் முடிவுக்கு உட்பட்டவை என்பதால், இதன் பின்னணி குறித்து அமைச்சு கருத்து தெரிவிப்பது உகந்ததல்ல என்றும் வர்த்தக விவகாரங்களில் எந்தவிதத் தடங்கலும் ஏற்படாதவாறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சு தெரிவித்துள்ளது.
அமெரிக்காவுடனான வர்த்தகப் பதற்றங்களைச் சமாளிக்கும் தென்கொரியாவின் முயற்சிகளில் யோ ஹான் கூ முக்கியப் பங்கு வகித்த நிலையில், அவரின் இந்த எதிர்பாராத பதவிநீக்கம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
நடப்பாண்டு தொடக்கத்தில் அமெரிக்காவுக்குப் பயணம் மேற்கொண்ட அவர், வரி தொடர்பான பூசல்களுக்குத் தீர்வு காண்பது குறித்து அமெரிக்க வர்த்தக அதிகாரிகள் மற்றும் சட்டம் இயற்றுபவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
தற்போது அமெரிக்க வர்த்தகச் சட்டப் பிரிவு 301ன்கீழ் மேற்கொள்ளப்படும் விசாரணை மற்றும் தென்கொரியாவின் இணைய வர்த்தக நிறுவனமான ‘கூபாங்’ தொடர்பான விவகாரங்கள் உட்பட அமெரிக்காவுடன் பல உணர்திறன்மிக்க வர்த்தகச் சிக்கல்களைத் தென்கொரியா எதிர்கொண்டு வரும் சூழலில் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


