சீனாவின் பொருளியல் வளர்ச்சி 3.4% மட்டுமே

2 mins read
71d13c34-cdc3-43d1-b6cb-3f6b982c1e57
சீனாவின் கிழக்கு மாகாணமான ஜியாங்சுவில் உள்ள துறைமுகத்தில் ஏப்ரல் 13ஆம் தேதி கப்பல்களில் சரக்குகள் ஏற்றப்படுகின்றன. வரும் காலாண்டுகளில் சீனாவின் ஏற்றுமதி குறையக்கூடும் என பொருளியல் நிபுணர்கள் கணித்துள்ளனர். - கோப்புப் படம்: ஏஎஃப்பி

பெய்ஜிங்: அமெரிக்காவின் வரி விதிப்பால் சீனாவில் ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் சீனாவின் இவ்வாண்டுக்கான பொருளியல் வளர்ச்சி 3.4 விழுக்காடு மட்டுமே இருக்கும் என்று சுவிட்சர்லாந்தின் யுபிஎஸ் வங்கி முன்னுரைத்துள்ளது.

முன்னதாக அதன் பொருளியல் வளர்ச்சி 4 விழுக்காடாக இருக்கும் என்று அது கணித்திருந்தது.

மேலும் 2026ஆம் ஆண்டில் அந்நாட்டின் பொருளியல் மூன்று விழுக்காடாக இருக்கும் என்று அது மதிப்பிட்டிருந்தது.

ஆனால் தற்போது இவை இரண்டையும் அவ்வங்கி குறைத்துள்ளது.

“அமெரிக்காவின் வரி விதிப்பால் சீனாவின் ஏற்றுமதிக்கு எதிர்பாராத சவால்கள் ஏற்பட்டுள்ளன. இதையடுத்து அதன் உள்நாட்டு பொருளியலில் பெரும் மாற்றங்கள் ஏற்படும்,” என்று ஏப்ரல் 15ஆம் தேதி வெளியிட்ட குறிப்பில் டாவோ வாங் உள்ளிட்ட யுபிஎஸ் பொருளியல் நிபுணர்கள் கூறினர்.

அண்மைய நாள்களில் சீனாவிற்கான தங்கள் எதிர்பார்ப்புகளை குறைத்த உலகளாவிய வங்கிகளில் கோல்ட்மேன் சேக்ஸ் குழுமம் மற்றும் சிட்டி குழுமம் ஆகியவையும் அடங்கும்.

பெரும்பாலான பொருளியல் வல்லுநர்கள், பெய்ஜிங் 2025ஆம் ஆண்டில் சுமார் 5 விழுக்காட்டு வளர்ச்சியை அடைவது சந்தேகம் என்று கூறுகின்றனர்.

தற்போதைய அமெரிக்க வரி உயர்வு நடப்பில் இருப்பதாக வைத்துக் கொண்டால், பொருளியல் வளர்ச்சிக்கு சீனா கூடுதல் நடவடிக்கைகளை எடுத்தாலும் அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தியை அது இரண்டு விழுக்காட்டுப் புள்ளிகளுக்கு மேல் குறைக்கும் என்று யுபிஎஸ் கணிக்கிறது.

வரும் காலாண்டுகளில் அமெரிக்காவுக்கான ஏற்றுமதிகள் மூன்றில் இரண்டு பங்கு குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் 2025ஆம் ஆண்டில் மொத்த வெளிநாட்டு ஏற்றுமதிகள், டாலர் அடிப்படையில் 10 விழுக்காடு குறையக்கூடும் என்று அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

குறிப்புச் சொற்கள்