ஜகார்த்தா: ஆசியான் நாடுகள், பொருளியல் ஒருங்கிணைப்பிற்கு தொடர்ந்து முக்கியத்துவம் அளித்து கவனம் செலுத்தவேண்டும் என்று பிரதமர் லீ சியன் லூங் வலியுறுத்தியுள்ளார்.
இதுவரை சிறப்பான வளர்ச்சி பதிவானபோதும், ஆசியானுக்கான புதிய வளர்ச்சித் துறைகளை மேம்படுத்தும் முயற்சிகளை விரைவுபடுத்த வேண்டும் என்றும் அவர் கூறினார்.
இந்தோனீசியத் தலைநகர் ஜகார்த்தாவில் நடைபெறும் 43வது ஆசியான் உச்சநிலை மாநாட்டில், செவ்வாய்க்கிழமை திரு லீ உரையாற்றினார்.
ஆசியான் அமைப்பை வலுப்படுத்தவும் புதிய சவால்களுக்கு இடையில் வட்டாரத்தின் மீள்திறனை மேம்படுத்தவும் ஆசியான் நாடுகளின் தலைவர்களுக்கு அவர் அழைப்பு விடுத்தார்.
“புதிய வளர்ச்சித் துறைகளை விரைந்து மேம்படுத்த வேண்டும். குறிப்பாக மின்னிலக்கம், பசுமைப் பொருளியல் போன்ற துறைகளை மேம்படுத்த வேண்டும்,” என்று பிரதமர் தமது உரையில் குறிப்பிட்டார்.
இந்தோனீசியா தற்போது ஆசியான் தலைமைத்துவத்தை ஏற்றுள்ளது. இவ்வாண்டில் இரண்டாவது முறையாக அது உச்சநிலை மாநாட்டை ஏற்றுநடத்துகிறது. திரு லீ தமது உரையில் அந்நாட்டைப் பாராட்டிப் பேசினார்.
‘அடிகா’ எனப்படும் ஆசியான் வட்டாரத்துக்கான வர்த்தக உடன்படிக்கையை மேம்படுத்துவதற்கு முக்கியத்துவம் தரவேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். அமைப்பு தோற்றுவிக்கப்பட்டது முதல் நடப்பில் இருக்கும் முக்கியமான பொருளியல் உடன்படிக்கை அது என்பதைத் திரு லீ சுட்டினார்.
வர்த்தக நிறுவனங்கள் அனைத்துலக வர்த்தக விதிகளைப் பின்பற்றிச் செயல்பட ‘அடிகா’ உடன்படிக்கை உதவுகிறது. வர்த்தக சமூகத்தின் தற்போதைய தேவைகளுக்குப் பொருத்தமான வகையில் அந்த ஒப்பந்தம் மேம்பாடு காணவிருக்கிறது.
தொடர்புடைய செய்திகள்
“மின்னிலக்கம், சுற்றுப்புறம், நெருக்கடியான சூழல்களில் வர்த்தகம் போன்ற அம்சங்களுக்கும் ஏற்றவாறு உடன்படிக்கையை விரிவுபடுத்துவது அவசியம்,” என்றார் திரு லீ.
சென்ற ஞாயிற்றுக்கிழமை ‘டெஃபா’ எனப்படும் ஆசியானுக்கான மின்னிலக்கப் பொருளியல் கட்டமைப்பு உடன்பாடு தொடர்பில் பேச்சுகள் தொடங்கின. அதைச் சுட்டிய பிரதமர் லீ, இந்தோனீசியத் தலைமைத்துவத்தின் பங்கும் வலுவான முயற்சிகளும் அதற்கு முக்கியக் காரணம் என்றார்.
2030ஆம் ஆண்டுக்குள் ஆசியான் வட்டாரத்தில் இரண்டு டிரில்லியன் அமெரிக்க டாலர் (S$2.7 டிரில்லியன்) மதிப்புள்ள இணைய வர்த்தகத்திற்கு அந்த ஒப்பந்தம் வகைசெய்யும்.
“அனைவரையும் உள்ளடக்கிய, மின்னிலக்கத் தொடர்பு, திறன்கள், கல்வி ஆகியவற்றின் மூலம் வாய்ப்புகளை உருவாக்கக்கூடிய, நிறுவனங்களுக்கும் மக்களுக்கும் பலன் தரக்கூடியதாக ‘டெஃபா’ ஒப்பந்தம் அமைய வேண்டும்,” என்றார் திரு லீ.
பசுமை எரிசக்திக்கு மாறுவது ஆசியானுக்கு மிகவும் முக்கியம் என்று அவர் எடுத்துரைத்தார். அமைப்பின் நீடித்த நிலைத்தன்மைமிக்க மேம்பாட்டிற்கும் தொடர் வளப்பத்திற்கும் அது முக்கியம் என்றார் அவர்.
இணையப்பாதுகாப்பு, உணவுப் பாதுகாப்பு உள்ளிட்ட புதிய சவால்களைச் சமாளிப்பது தொடர்பிலும் ஆசியான் அதன் திறனை மேம்படுத்துவது அவசியம் என்றார் திரு லீ.
“ஆசியான், மேலும் ஒருங்கிணைந்த, சிறப்பாகச் செயல்படக்கூடிய அமைப்பாக விளங்குவதன் மூலம் அதன் முக்கியத்துவத்தை வலுப்படுத்த இயலும். காலத்துக்கேற்ற அமைப்பாக விளங்குவதை உறுதிசெய்ய முடியும். கொவிட்-19 கிருமிப் பரவலுக்குப் பிந்திய உலகில் போட்டித்தன்மையை மேம்படுத்த இயலும்,” என்று பிரதமர் லீ கூறினார்.