மலேசிய ரமலான் சந்தைகளில் 100,000 கிலோ மிச்ச உணவு வீணாகாதிருக்க முயற்சி

மலேசிய ரமலான் சந்தைகளில் 100,000 கிலோ மிச்ச உணவு வீணாகாதிருக்க முயற்சி

1 mins read
9e2f07c8-414b-4fce-8e01-0855b04eb400
அராவ் ரமலான் சந்தை. - படம்: மலாய் மெயில்

அராவ் (மலேசியா): மலேசியாவின் ரமலான் சந்தைகளில் 100,000 கிலோகிராம் வரையிலான மிஞ்சிப்போகும் உணவை ‘மீட்க’ அந்நாட்டின் கட்டிக் கழிவு, பொதுச் சுத்திகரிப்பு நிர்வாகக் குழு (எஸ்டபிள்யுகார்ப்) திட்டமிட்டுள்ளது.

இவ்வாண்டு நாடு முழுவதும் உள்ள ரமலான் சந்தைகளில் உணவு வீணடிக்கப்படுவதைக் குறைக்கும் இயக்கத்தின்கீழ் அந்தக் குழு இந்நடவடிக்கையை மேற்கொள்ள எண்ணம் கொண்டுள்ளது. சென்ற ஆண்டு இதுபோன்ற இயக்கத்தின் மூலம் பெரிய அளவில் உணவு வீணடிக்காமல் பார்த்துக்கொள்ளப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“நமது கணக்குகளின்படி சென்ற ஆண்டு 70,000 கிலோகிராமுக்கும் அதிகமான உணவு கழிவுக் குழிகளுக்குக் (landfills) கொண்டு செல்லப்படுவதிலிருந்து தவிர்க்கப்பட்டது. அந்த வகையில், பொதுமக்கள், வர்த்தகர்கள் இரு தரப்பினரிடையேயும் விழிப்புணர்வு அதிகரிப்பதற்கான அறிகுறிகள் தெரிகின்றன. இவ்வாண்டு 80,000லிருந்து 100,000 கிலோகிராம் வரையிலான உணவு வீணாகாமல் பார்த்துக்கொள்ளப்படும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்,” என்று எஸ்டபிள்யுகார்ப் தலைமை நிர்வாக அதிகாரி காலிட் முகம்மது செய்தியாளர்களிடம் கூறினார்.

இவ்வாண்டு நோன்புப் பெருநாளையொட்டி அராவ் ரமலான் சந்தையில் வியாழக்கிழமை (பிப்ரவரி 26) ‘உணவுக்கு நன்றியுடன் இருங்கள், வீணடிப்பதைத் தவிர்க்கவும்’ (Appreciate Food, Avoid Waste Campaign) இயக்கத்தைத் தொடங்கி வைத்த பிறகு அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.

விற்கப்படாத அல்லது உட்கொள்ளப்படாத உணவைச் சேகரித்து வசதி குறைந்தோருக்கு விநியோகிக்கப்படும் என்று திரு காலிட் தெரிவித்தார். பல்வேறு உத்திபூர்வப் பங்காளிகள், அரசாங்க சார்பற்ற அமைப்பு ஆகிய தரப்புகளுடன் இணைந்து உணவு விநியோகிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

குறிப்புச் சொற்கள்