ஹூதித் தாக்குதலை எதிர்கொள்வதில் சவூதிக்கு உதவ எகிப்து பரிசீலனை

ஹூதித் தாக்குதலை எதிர்கொள்வதில் சவூதிக்கு உதவ எகிப்து பரிசீலனை

கோப்புப் படம்: ராய்ட்டர்ஸ்

18 Oct 2026 - 10:58 am

2 mins read

ரியாத்: ஏமனின் ஹூதிக் கிளர்ச்சியாளர்கள் நடத்திவரும் தொடர் தாக்குதல்களைச் சவூதி அரேபியா எதிர்கொண்டு வருகிறது. இந்நிலையில், சவூதிக்கு ராணுவ உதவி வழங்குவது குறித்து அதன் நட்பு நாடான எகிப்து பரிசீலித்து வருகிறது.

ஏமன் அரசாங்கத்திற்கு ஆதரவாகச் செயல்படும் ராணுவக் கூட்டமைப்புக்குச் சவூதி அரேபியா தலைமை தாங்குகிறது. கடந்த சில நாள்களாகச் சவூதி நடத்திய தாக்குதல்களில் பலர் உயிரிழந்ததாக ஹூதிப் பேச்சாளர் சனிக்கிழமை (அக்டோபர் 17) தெரிவித்தார்.

தலைநகர் ரியாத்தையும் தெற்குப் பகுதிகளையும் நோக்கிச் சென்ற ஆளில்லா வானூர்திகளைத் தங்கள் படைகள் வெற்றிகரமாக அழித்ததாகச் சவூதி ராணுவம் கூறியது.

இந்நிலையில், சவூதி அரேபியா கோரிக்கை விடுத்தால் அதன் பாதுகாப்பிற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கத் தயார் என எகிப்திய அதிபர் அப்தெல் ஃபத்தாஹ் அல்-சிசி தெரிவித்தார்.

வட்டாரப் போர்களில் தாங்கள் ஈடுபட விரும்பாவிட்டாலும் சவூதியின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுவதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க முடியாது என அவர் குறிப்பிட்டார். இது தொடர்பாக விவாதிக்க எகிப்திய நாடாளுமன்றத்தின் அவசரக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை கூடவிருந்தது.

தொடர் தாக்குதல்களால் சவூதி விமான நிலையங்களைப் பயன்படுத்த வேண்டாம் என வெளிநாட்டுத் தூதரகங்கள் எச்சரித்துள்ளன. ரியாத்தில் வீட்டிலிருந்து கல்வி கற்கும் முறை நீட்டிக்கப்பட்டுள்ளது.

வான்வழி அச்சுறுத்தல் குறித்த எச்சரிக்கைத் தகவல் ரியாத்தில் வசிப்போரின் கைப்பேசிகளுக்கு அனுப்பப்பட்டு, பின்னர் அது மீட்டுக்கொள்ளப்பட்டது.

அண்மைத் தாக்குதல்களுக்கு ஈரானே காரணம் எனச் சவூதி சாடியுள்ளது. ஆனால், இக்குற்றச்சாட்டை மறுத்துள்ள ஈரான், அமைதிப் பேச்சுக்கே ஆதரவு தருவதாகத் தெரிவித்தது.

இதற்கிடையே, ஈரானின் சமரச முயற்சியை ஏமன் வெளியுறவு அமைச்சு முற்றிலுமாக நிராகரித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்
ஹூதிசவூதி அரேபியாஎகிப்துஏமன்