வாஷிங்டன்: அமெரிக்காவின் தென்கிழக்கு மாநிலமான லூசியானாவில் எட்டுக் குழந்தைகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
ஒன்று முதல் 14 வயது வரையிலான அந்தக் குழந்தைகளைச் சுட்டுக் கொன்ற துப்பாக்கிக்காரனைக் காவல்துறை துரத்திப் பிடித்துச் சுட்டு வீழ்த்தியதாக உள்ளூர் அதிகாரிகள் கூறினர். லூசியானாவின் ‘ஷ்ரீவ்போர்ட்’ நகரில் நிகழ்ந்த அச்சம்பவம் குடும்ப வன்முறை தொடர்பானது என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
வீட்டில் ஏழு குழந்தைகளின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன. எட்டாவது குழந்தை மாடிப்படி வழியாகத் தப்பிக்க முயன்றபோது சுட்டுக் கொல்லப்பட்டதாக ‘ஷ்ரீவ்போர்ட்’ காவல்துறைச் செய்தித் தொடர்பாளர் கிறிஸ்டஃபர் பார்டெலோன், ‘கேடிபிஎஸ்’ என்னும் உள்ளூர் தொலைக்காட்சியிடம் தெரிவித்தார்.
இது ஒரு கொடூரமான குற்றம் என்று அவர் குறிப்பிட்டார்.
சந்தேக நபர் முதலில் ஒரு பெண்ணைச் சுட்டதாகவும் பின்னர் அருகிலுள்ள ஒரு வீட்டிற்குச் சென்று குழந்தைகளைச் சுட்டுக் கொன்றதாகவும் முதற்கட்டத் தகவல்கள் தெரிவிப்பதாக ஷ்ரீவ்போர்ட் காவல்துறை தனது ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிட்டது.
கடுமையான காயங்களுடன் இரண்டு பெண்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருவதாகவும் அவர்களில் ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் அந்தப் பதிவு தெரிவித்தது.
துப்பாக்கிச்சூடு நடத்திய சந்தேக நபரும் சுடப்பட்டுக் காயமடைந்த பெண்ணும் உயிரிழந்த குழந்தைகளில் ஏழு குழந்தைகளின் பெற்றோர் என்று கேஎஸ்எல்ஏ தொலைக்காட்சியிடம் திரு. பார்டெலோன் கூறினார்.
சம்பவம் அமெரிக்க நேரப்படி ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 19) காலை 6 மணியளவில் நிகழ்ந்ததாகவும் அவர் தெரிவித்தார்.
தொடர்புடைய செய்திகள்
துப்பாக்கிச்சூடு நடத்திய பின்னர் அந்த ஆடவர் வாகனம் ஒன்றைக் கடத்தி அதில் வேகமாகத் தப்பினார். காவல்துறை அவரைத் துரத்தியது. போசியர் பாரிஷ் என்னும் பகுதியில் காவல்துறையினர் அந்த வாகனத்தின்மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதில் சந்தேக ஆடவர் கொல்லப்பட்டதாக அவர் அந்தச் சம்பவத்தை விவரித்தார்.
இதற்கிடையே, கொடூரத்தை நிகழ்த்திய சந்தேக நபர் ஷமார் எல்கின்ஸ் எனக் காவல்துறை அடையாளம் கண்டுள்ளதாக, ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் ஷ்ரீவ்போர்ட் நகர மேயர் அலுவலகத்தைச் சேர்ந்த லீ ஆன் எவன்ஸ்கி தெரிவித்தார்.

