குவா முசாங் (கிளந்தான்): மலேசியாவின் கிளந்தான் மாநிலத்தில் உள்ள குவா முசாங்-கோத்தா பாரு சாலையில் எட்டு மீட்டர் ஆழத்துக்குக் குழி உருவாகியிருக்கிறது.
அதைத் தொடர்ந்து சனிக்கிழமை (அக்டோபர் 10) அந்தச் சாலை வாகனப் போக்குவரத்துக்கு மூடப்பட்டது. கெசெடார் எத்னோபொட்டெனிக்கல் பார்க் எனப்படும் பூங்காவுக்கு அருகே இச்சம்பவம் நிகழ்ந்தது.
இதனால் எஃப்டி08 (FT08) பாதையில் மலேசிய பொதுப்பணித் துறை தற்காலிகமாகப் பாலம் (Bailey bridge) ஒன்றை அமைக்கவிருக்கிறது. அந்தப் பாலத்தை அமைப்பதற்கான பணிகள் வரும் புதன்கிழமை (அக்டோபர் 14) தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக மலேசிய பொதுப்பணித் துறை ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 11) அறிக்கை மூலம் தெரிவித்தது.
சம்பந்தப்பட்ட இடத்தின் பாதுகாப்பு, அங்குள்ள மணலின் நிலைத்தன்மை ஆகியவற்றைப் பொறுத்து பாலம் ஒரு வாரத்துக்குள் கட்டி முடிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் பொதுப்பணித் துறை குறிப்பிட்டது. பணிகள் மேற்கொள்ளப்படும்போது சம்பவ இடத்தில் நிலைமை கண்காணிக்கப்பட்டு சாலையைப் பயன்படுத்துவோரின் பாதுகாப்புக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்று அது குறிப்பிட்டது.
பாலத்தை அமைக்கும் குழு, சோதனைகளை நடத்தவதற்காக திங்கட்கிழமை (அக்டோபர் 12) சம்பவ இடத்துக்குப் போகும் என்று கிளந்தானுக்கான பொதுப்பணித் துறைத் தலைவர் நிக் பட்லிஹிஷாம் நிக் இஸ்மாயில் தன்னிடம் கேட்கப்பட்ட கேள்விக்குப் பதிலளித்தார்.
