போகோர்: இந்தோனீசியாவின் மேற்கு ஜாவா வட்டாரத்தைச் சேர்ந்த போகோரில் உள்ள சியாவி சுங்கச் சாவடியில் நடந்த மோசமான விபத்தில் எட்டுப் பேர் உயிரிழந்தனர். மேலும் 11 பேர் காயமடைந்ததாகக் கூறப்பட்டுள்ளது.
இச்சம்பவம், பிப்ரவரி 4ஆம் தேதி நள்ளிரவுக்குச் சற்றுமுன் நடந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
குடிநீர்க் கலன்களை ஏற்றிக்கொண்டு ஜகார்த்தா நோக்கிச் சென்ற லாரி ஒன்று அந்தச் சுங்கச் சாவடிக்கு வந்தபோது கட்டுப்பாட்டை இழந்ததாகக் காவல்துறை கூறியது.
சுங்கக் கட்டணம் செலுத்துவதற்காக வரிசையில் நின்றிருந்த சில வாகனங்கள் மீது அந்த லாரி மோதியது. அதனால் ஆறு வாகனங்கள் சேதமடைந்தன. அவற்றில் மூன்று தீப்பிடித்ததாகக் கூறப்பட்டது.
இச்சம்பவத்தில் அந்த சுங்கச் சாவடியின் சுங்கக் கட்டண முகப்புகள் மூன்று சேதமடைந்ததாகவும் தெரிகிறது.
“லாரியின் வேகக் கட்டுப்பாட்டுக் கருவி பழுதானதால் அது மற்ற வாகனங்கள் மீது மோதியதாக நம்பப்படுகிறது. மாண்டவர்கள் அனைவரும் பாதிக்கப்பட்ட வாகனங்களில் இருந்தவர்கள்,” என்று காவல்துறை பிப்ரவரி 5ஆம் தேதி தெரிவித்தது.
காயமடைந்தவர்கள் சியாவி பொது மருத்துவமனைக்கு விரைந்து கொண்டுசெல்லப்பட்டனர். அவர்களில் நால்வருக்குக் கடுமையான காயங்கள் ஏற்பட்டதாகவும் மேலும் ஏழு பேருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
காயமடைந்தோரில் நால்வர் அந்தச் சுங்கச் சாவடியின் வாடிக்கையாளர் சேவை அதிகாரிகள்.
தொடர்புடைய செய்திகள்
திருவாட்டி சுகியார்டி, லேசாகக் காயமடைந்தோரில் ஒருவர். இச்சம்பவத்தில் உயிரிழந்தோரில் அவரது கணவரும் அடங்குவார்.
சுங்கக் கட்டணத்தைச் செலுத்துவதற்கான மின்னட்டை வேலை செய்யாததால் தனது கணவர் காரை விட்டுக் கீழே இறங்கி, பின்னால் நின்றிருந்த காரில் உள்ளவர்களிடம் மின்னட்டையைக் கடனாகப் பெறச் சென்றபோது லாரி அவரை மோதி இழுத்துச் சென்றதாகத் திருவாட்டி சுகியார்டி கூறினார். தங்கள் கார் தலைகீழாகக் கவிழ்ந்ததாகவும் அவர் சொன்னார்.
விபத்தை அடுத்து சியாவி சுங்கச் சாவடி தற்காலிகமாக மூடப்பட்டது. பிப்ரவரி 5ஆம் தேதி அதன் ஒரு பகுதி மட்டும் மீண்டும் திறக்கப்பட்டது.
இந்தோனீசியப் போக்குவரத்து அமைச்சு இவ்விபத்தில் பாதிக்கப்பட்டோரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொண்டது. விபத்துக்கான காரணத்தைக் கண்டறிய ஒரு குழுவைச் சம்பவ இடத்துக்கு அது அனுப்பியுள்ளது.