கோலாலம்பூர்: எதிர்வரும் வடகிழக்குப் பருவமழைக் காலத்தில் ‘எல் நினோ’ காரணமாக மலேசியாவின் ஜோகூர், மலாக்கா மாநிலங்களில் மழைப்பொழிவு 20 முதல் 40 விழுக்காடு வரை குறையக்கூடும் என்று அந்நாட்டு வானிலை ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது.
மலேசிய வானிலை ஆய்வு நிலையத்தின் தலைமை இயக்குநர் டாக்டர் முகமது ஹிஷாம் முகமது அனிப் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில் அதனைத் தெரிவித்தார்.
பசிபிக் பெருங்கடலுக்கு அருகில் அமைந்துள்ளதால் சாபா மாநிலத்திலும் கிழக்குக் கரையோரப் பகுதியிலும் மழைப்பொழிவு குறையக்கூடும் என்றார்.
“வழக்கமாக அக்டோபர் இறுதியில் தொடங்கும் வடகிழக்குப் பருவமழை, மார்ச் இறுதியில் முடிவடையும். இருப்பினும், வரும் ஆண்டின் தொடக்கத்தில் எல் நினோ தாக்கம் உச்சத்தை எட்டும் என்பதால் பிப்ரவரி முதல் மே மாதம் வரை மலேசியாவின் வெப்பநிலை 35 டிகிரி செல்சியசைத் தாண்டக்கூடும்,” என்றார் ஹிஷாம்.
தீபகற்ப மலேசியாவின் கிழக்குக் கரையோரப் பகுதியில் அமைந்துள்ள கிளந்தான், திராங்கானு, பாகாங் மாநிலங்களில் நவம்பர், டிசம்பர் மாதங்களில் வழக்கமாகப் பெருமளவிலான மழைப்பொழிவு பதிவாகும்.
எல்-நினோ என்பது பருவநிலை நிகழ்வு. இது மத்திய, கிழக்கு பசிபிக் பெருங்கடல் பகுதிகளில் கடல் மேற்பரப்பு வெப்பமயமாதலுடன் தொடர்புடைய பருவநிலை மாற்றமாகும்.
எல்-நினோ காலத்தில் வெப்பம் வழக்கத்தைவிட அதிகமாக இருக்கும். இதனால் கடுமையான வறட்சி ஏற்படும். குறைந்த நேரத்தில் அதீத மழை, திடீர் புயல் போன்ற பாதிப்புகளும் ஏற்படலாம். எல் நினோ நிகழ்வு சராசரியாக இரண்டு முதல் ஏழு ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழ்கிறது என்று வானிலை வல்லுநர்கள் கணித்துள்ளனர்.

