தென் அமெரிக்க நாடான எல் சால்வடோரில் புதிய 'மெகா சிறைச்சாலை' அமைக்கப்பட்டுள்ளது. உலகின் ஆகப் பெரிய சிறைச்சாலைகளில் இதுவும் ஒன்றாகக் கருதப்படுகிறது. இந்த சிறைச்சாலையில் 40,000 பேர் வரை சிறையடைக்கும் வசதிகள் உள்ளன.
முதல் கட்டமாக 2,000க்கும் மேற்பட்ட சட்டவிரோத குண்டர் கும்பல் உறுப்பினர்கள் புதிய சிறைக்கு மாற்றப்பட்டுள்ளனர். சட்டவிரோத கும்பல்களை வேரோடு களையும் அதிரடி நடவடிக்கையை அந்நாட்டு அதிபர் மேற்கொண்டுள்ளார். புதிய சிறைச்சாலையில் கட்டுப்பாடுகள் வலுவாக இருக்கும் என்பதால், குண்டர் கும்பல் உறுப்பினர்களால் பொதுமக்களுக்கு ஆபத்து இருக்காது என்றும் அதிபர் நயீப் புக்கெலி குறிப்பிட்டார்.
சென்ற ஆண்டு கிட்டத்தட்ட 64,000 குண்டர் கும்பல் உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டனர். அண்மை காலத்தில் அந்நாட்டில் அதிகரித்துள்ள கொடூரமான பல கொலைகளுக்கு குண்டர் கும்பல் உறுப்பினர்கள் காரணம் எனக் கூறப்படுகிறது.
திரு புக்கெலியின் இந்த அதிரடி நடவடிக்கைகள் அந்நாட்டு மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

