சில்ஹெட்: பங்ளாதேஷில் வரும் பிப்ரவரி மாதம் நடைபெறவிருக்கும் பொதுத் தேர்தலை முன்னிட்டு வியாழக்கிழமை (ஜனவரி 22) அதிகாரபூர்வமாக பிரசாரங்கள் தொடங்கியுள்ளன.
முன்னாள் பிரதமர் ஷேக் ஹசினாவின் ஆட்சிக்கு எதிராக 2024ல் நடந்த கலவரங்களை அடுத்து அங்குப் பொதுத் தேர்தல் நடைபெறவிருக்கிறது.
பங்ளாதேஷின் மக்கள்தொகை 170 மில்லியன் என்று கூறப்பட்டுள்ளது. பிப்ரவரி 12ஆம் தேதி, பங்ளாதேஷ் நாடாளுமன்றத்துக்கான 350 உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க அந்நாட்டு மக்கள் வாக்களிப்பர்.
திருவாட்டி ஹசினாவுக்கு எதிரான போராட்டங்களின்போது கடந்த டிசம்பரில் மாணவர் தலைவர் ஒருவர் கொல்லப்பட்டார். பாதுகாப்பற்ற சூழலில் இந்தத் தேர்தல் நடைபெறவிருப்பதாக அரசியல் கவனிப்பாளர்கள் கூறும் நிலையில், இந்த ஆண்டின் (2026) ஆகப் பெரிய ஜனநாயக நடைமுறை இந்தத் தேர்தல் என்று ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கவனிப்பாளர்கள் கூறுகின்றனர்.
முன்னணி அரசியல் கட்சியான பங்ளாதேஷ் தேசியவாதக் கட்சி (BNP)யும் ஆகப் பெரிய இஸ்லாமியக் கட்சியான ஜமாத்-இ-இஸ்லாமியும் அவற்றின் தேர்தல் பிரசாரங்களை அதிகாரபூர்வமாகத் தொடங்கியுள்ளன. இக்கட்சிகளின் பிரசாரக் கூட்டங்களுக்கு பல்லாயிரக்கணக்கானோர் திரள்வர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நாடு கடந்து வாழ்ந்துவந்த ‘பிஎன்பி’ கட்சியின் தலைவரான 60 வயது தாரிக் ரஹ்மான், 17 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த டிசம்பரில் பங்ளாதேஷ் திரும்பினார். வடகிழக்கு நகரான சில்ஹெட்டில் தொடங்கி, தொடர்ச்சியாகப் பல்வேறு பிரசாரக் கூட்டங்களில் அவர் உரையாற்றுவார் என்று கூறப்படுகிறது.
நாட்டின் முன்னாள் பிரதமரான கலிடா ஸியாவின் மகனான திரு ரஹ்மான், தமது தாயாரின் மறைவுக்குப் பிறகு 2025 டிசம்பரில் கட்சித் தலைவராகப் பொறுப்பேற்றுக்கொண்டார்.
இவ்வேளையில், ஜமாத்-இ-இஸ்லாமி கட்சி, தலைநகர் டாக்காவில் பிரசாரத்தைத் தொடங்கியுள்ளது. மாணவர் தலைவர்கள் தொடங்கியுள்ள தேசிய குடிமக்கள் கட்சி, ஜமாத் கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ளது.

