தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மியன்மாரில் தேர்தல் பிரசாரம் தொடங்கியது

1 mins read
dc44a2f8-6a5d-4486-9154-ca6b8bb8240b
தேர்தலில் களமிறங்க அனுமதி வழங்கப்பட்ட 57 கட்சிகள் செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 28) முதல் பிரசாரத்தைத் தொடங்கியுள்ளன. - படம்: ஏஎஃப்பி

யங்கூன்: மியன்மாரில் டிசம்பர் மாத இறுதியில் பொதுத் தேர்தல் நடக்கவுள்ளது. தேர்தலில் களமிறங்க அனுமதி வழங்கப்பட்ட கட்சிகள் செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 28) முதல் பிரசாரத்தைத் தொடங்கியுள்ளன.

மியன்மார் ராணுவத்தின் தலைமையில் பொதுத்தேர்தல் நடக்கிறது. கண்துடைப்புக்காகத் தேர்தல் நடத்தப்படுகிறது என்று எதிர்ப்புகளும் எழுந்துள்ளன. ராணுவ ஆட்சியைச் சட்டபூர்வமாக நடத்துவதற்கு நடத்தப்படும் நாடகம் இது என்று குறை கூறப்படுகிறது.

2021ஆம் ஆண்டு மியன்மாரில் ராணுவத்தால் ஆட்சிக் கவிழ்ப்பு அரங்கேறியது. ஆங் சான் சூச்சி சிறையில் அடைக்கப்பட்டார். அதன்பின்னர் மியன்மாரில் வன்முறை வெடித்தது. கிளர்ச்சியாளர்கள், போராளிகள் உள்ளிட்ட பல குழுக்களால் மியன்மார் சிதைந்தது.

கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள இடங்களிலும் சண்டை நடக்கும் இடங்களிலும் தேர்தல் நடக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 28ஆம் தேதி முதல் கட்டங்கட்டமாக நடக்கும் தேர்தலில் 57 கட்சிகள் போட்டியிடுகின்றன.

இந்நிலையில், ஆசியான் அமைப்பு மியன்மாருக்கு அதன் தேர்தல் கண்காணிப்புக் குழுவை அனுப்பாது என்று தெரிவித்துள்ளது. தற்போது நடந்துவரும் ஆசியான் உச்சநிலை மாநாட்டில் மியன்மார் தலைவர்கள் பங்கேற்க அழைப்பு விடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்புச் சொற்கள்