அமெரிக்காவில் தேர்தல் நாளில் தாக்குதல் நடத்தத் திட்டம்: சந்தேக நபர் கைது

1 mins read
867caa4f-8d22-4094-b59f-9ab38870525b
படம்: - www.lexipol.com / இணையம்

ஓக்லஹாமா: அமெரிக்காவில் தேர்தல் நாளன்று பயங்கரவாதத் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருந்ததாகச் சந்தேகிக்கப்படும் ஆப்கானிய ஆடவர் ஒருவர் ஓக்லஹாமா நகரில் கைது செய்யப்பட்டுள்ளார் என்று அந்நாட்டின் நீதித்துறைப் பிரிவு செவ்வாய்க்கிழமையன்று (அக்டோபர் 8) தெரிவித்தது.

கைது செய்யப்பட்ட நாசிர் அகம்மது தாவ்ஹெடி எனும் ஆடவர் ஓக்லஹாமா நகரில் வசித்து வந்தார். அவர் 2021ஆம் ஆண்டு சிறப்பு வெளிநாட்டு ஊழியர் விசாவின் மூலம் அமெரிக்காவுக்குச் சென்றார்.

ஐஎஸ்ஐஎஸ் என்றழைக்கப்படும் பயங்கரவாத அமைப்பின் சார்பில் அவர் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருந்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

சிறப்பு வெளிநாட்டு ஊழியர் விசா திட்டத்தின்கீழ் ஆண்டுதோறும் 50 பேர் வரை அமெரிக்கா செல்கின்றனர். அந்த விசா, அமெரிக்க ஆயுதப் படைகளுடன் பணியாற்றியோர், ஈராக், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் அமெரிக்கத் தூதர்களுக்கு மொழிபெயர்ப்பாளர்களாக இருந்தவர்கள் போன்றோருக்கானது.

தாவ்ஹெடி, ஆப்கானிஸ்தானில் மொழிபெயர்பாளராகப் பணியாற்றினாரா என்ற விவரம் குற்றச்சாட்டு ஆவணத்தில் குறிப்பிடப்படவில்லை. இதுகுறித்து அமெரிக்க நீதித்துறைப் பிரிவு தங்களிடம் எழுப்பப்பட்ட கேள்விக்கு உடனடியாகக் கருத்து தெரிவிக்கவில்லை.

தாவ்ஹெடி, வயது குறைந்த அவரின் மைத்துனர் இருவரும் திங்கட்கிழமையன்று (அக்டோபர் 7) கைது செய்யப்பட்டனர்.

குறிப்புச் சொற்கள்