ஐந்தாண்டு கிளர்ச்சிக்குப் பிறகு மியன்மாரில் தேர்தல்

2 mins read
4bd46366-e351-4d02-aa37-57fc49ccb712
மியன்மார் தேர்தலில் வாக்களிக்க ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 28) வரிசையில் நிற்கும் மக்கள். - படம்: ஏஎஃப்பி

யங்கூன்: மியன்மாரில் மூன்று கட்டங்களாக நடைபெறும் பொதுத் தேர்தல் வாக்களிப்பின் முதல் கட்டம் நிறைவடைந்துள்ளது.

ஐந்தாண்டுகளாக நீடிக்கும் உள்நாட்டுப் போருக்கு இடையே ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 28) தேர்தல் தொடங்கியிருக்கிறது.

முக்கிய அரசியல் கட்சிகள் கலைக்கப்பட்டிருப்பதாலும் அரசியல் தலைவர்கள் சிறையில் இருப்பதாலும் தற்போது இடம்பெறும் தேர்தல் கண்துடைப்பு என்று அரசியல் கண்காணிப்பாளர்கள் கருதுகின்றனர்.

மியன்மார் மக்களால் பெருமளவில் ஆதரிக்கப்படும் முன்னாள் தலைவர் ஆங் சான் சூச்சி இன்னமும் சிறையில் வைக்கப்பட்டுள்ளார்.

கடந்த 2021ஆம் ஆண்டில் அவரது ஆட்சி கைப்பற்றப்பட்டதுடன் அவரது தேசிய ஜனநாயகக் கட்சியோடு மேலும் 40 அரசியல் கட்சிகள் கலைக்கப்பட்டுள்ளன.

இதற்கிடையே, மியன்மாரில் அறிமுகம் செய்யப்பட்ட புதிய சட்டத்தின்கீழ் தேர்தலுக்கு இடையூறு விளைவித்ததுடன் தேர்தலை எதிர்த்ததாக 200க்கும் அதிகமானோர்மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அத்தகைய குற்றத்திற்கு மரண தண்டனை உள்ளிட்ட கடுமையான தண்டனைகள் விதிக்கப்படக்கூடும்.

நாட்டில் எழும் எதிர்ப்புகளை, அடக்குமுறைகள் மூலம் தடுத்து, ராணுவத்துக்கு ஆதரவானோரைத் தேர்தலில் ஆட்சியினர் நிற்கவைத்துள்ளதாக ஐக்கிய நாட்டு மனித உரிமை ஆணையமும் மேற்கத்திய அரசதந்திரிகளும் குறைகூறியுள்ளன.

ராணுவ ஆட்சியை ஆதரிக்கும் ஒருங்கிணைந்த ஒற்றுமை மேம்பாட்டுக் கட்சி (USDP) ஆகப் பெரிய போட்டியாளராக உள்ளது.

அக்கட்சி, ராணுவ ஆட்சியினரின் பெயர் மாற்றம் செய்யப்பட்ட கட்சி எனவும் பல இடங்களில் போட்டியின்றி அது வெற்றிபெறும் என்றும் அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.

ஏறத்தாழ 50 மில்லியன் மக்கள்தொகை கொண்ட தென்கிழக்காசிய நாடான மியன்மாரில் கிளர்ச்சிப் படைகள் ஆக்கிரமிப்பில் உள்ள இடங்களில் தேர்தல் இல்லை.

ராணுவ ஆட்சியினர் கட்டுப்பாட்டில் உள்ள வட்டாரங்களில் முதல் கட்ட வாக்களிப்பு சிங்கப்பூர் நேரப்படி ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணிக்கு தொடங்கியது.

ராணுவ ஆட்சியின் தலைவர் மின் அங் ஹிலையிங் ஊடகப் பேட்டிக்கு அனுமதி வழங்கவில்லை.

தேர்தல் சமரசத்துக்கும் நல்லிணக்கத்துக்குமான பாதை என்று தொடர்ந்து அவர் குறிப்பிட்டு வந்துள்ளார்.

புதிய வாக்களிப்பு இயந்திரங்களை தேர்தலில் ராணுவ ஆட்சி அறிமுகப்படுத்தியுள்ளது.

ஐந்தாண்டுகளுக்குப் பிறகு மியன்மார் ஜனநாயகத்துக்குத் திரும்புவதாக ராணுவ ஆட்சியினர் தேர்தலைப் பற்றி கருத்துரைத்துள்ளனர்.

ஒரு சிலர் இது ஒரு நாடகம் என்று கூறி தேர்தலைப் புறக்கணிக்கின்றனர்.

அரசியல் கைதிகளுக்கான உதவி அமைப்பின் தரவுகள்படி, ஏறத்தாழ 22,000 பேர் அரசியல் காரணங்களுக்காக மியன்மாரில் கைதாகியுள்ளனர்.

தேர்தலில் புதுக்கட்சியோடு இணைந்து போட்டியிடும் முன்னாள் போராளிகள், கிளர்ச்சியால் மக்களே தாக்குதலுக்கு உள்ளாவதாகவும் ராணுவத்தை அரசியலில் இருந்து நீக்கமுடியாது எனவும் கூறியுள்ளனர்.

குறிப்புச் சொற்கள்