தக்காய்ச்சியின் மகத்தான வெற்றியை உறுதிசெய்த தேர்தல் முடிவுகள்

தக்காய்ச்சியின் மகத்தான வெற்றியை உறுதிசெய்த தேர்தல் முடிவுகள்

2 mins read
3b2f3944-7bfa-4c08-b722-d8483ebc5ea7
செவ்வாய்க் கிழமை (பிப்ரவரி 10) ஜப்பானிய பிரதமர் சானே தக்காய்ச்சி அமோக வெற்றிக்குப் பிறகு பிரதமர் அலுவலகத்தில் நுழைகிறார். - படம்: ஏஎஃப்பி

தோக்கியோ: ஜப்பானின் ஆளும் மிதவாத ஜனநாயகக் கட்சியின் தலைவரும் பிரதமருமான சானே தக்காய்ச்சியின் மகத்தான வெற்றியை தேர்தல் முடிவுகள் உறுதிசெய்துள்ளன.

பிப்ரவரி 10ஆம் தேதி தேர்தல் முடிவுகள் அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டன.

கடந்த வாரம் அறிவிக்கப்பட்ட திடீர் தேர்தலில் தக்காய்ச்சியின் லிபரல் ஜனநாயகக் கட்சி (எல்டிபி) 315 இடங்களை வென்று மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையைப் பெற்றதாகத் தெரிவிக்கப்பட்டது.

இம்முடிவு, எல்டிபி வரலாற்றில் மிகச் சிறந்த வெற்றியாகும். இதையடுத்து ஜப்பானின் முதல் பெண் பிரதமரான தக்காய்ச்சி அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு நாட்டின் 123 மில்லியன் மக்களை நிர்வகிக்க இருக்கிறார்.

எல்டிபியின் கூட்டணிக் கட்சியான ஜப்பான் இன்னோவேஷன் கட்சி (ஜேஐபி), 36 இடங்களில் வென்றுள்ளதால் ஆளும் கூட்டணியின் பலம் 351க்கு அதிகரிக்கிறது. கீழவையின் மொத்த இடங்கள் 465.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் எல்டிபி 198 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. ஜேஐபி 34 இடங்களை வென்றது.

இந்தத் தேர்தலில், குடியேற்றத்தை எதிர்க்கும் சான்சிட்டோ கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எண்ணிக்கை இரண்டு இடங்களிலிருந்து 15க்கு அதிகரித்தது.

முக்கிய எதிர்க்கட்சியான அரசியலமைப்பு ஜனநாயகக் கட்சியும் எல்டிபியின் முந்தைய கூட்டணிக் கட்சியான கோமெய்ட்டோவும் இணைந்த கூட்டணி படுதோல்வியைச் சந்தித்துள்ளது. அந்தக் கூட்டணியின் இடங்கள் 167லிருந்து 49க்குச் சரிந்தது.

பிப்ரவரி 9ஆம் தேதி செய்தியாளர் கூட்டத்தில் பேசிய திருவாட்டி தக்காய்ச்சி, 64, “ஜப்பானை வலிமையாகவும், வளமாகவும் மாற்றுவதற்கான ஒரு கனமான பொறுப்பின் தொடக்கம் இது,” என்று குறிப்பிட்டார்.

“ஒரு பெரிய கொள்கை மாற்றத்திற்கான அவசரத் தேவை குறித்த எங்களுடைய கோரிக்கைகளுக்கு மக்கள் செவிசாய்த்துள்ளனர்,” என்று அவர் மேலும் கூறினார்.

ஆனால் இந்தத் தேர்தலில் குறைவான பெண்களே வெற்றி பெற்றுள்ளனர்.

மொத்தம் 465 கீழவை இடங்களில் 68 இடங்களில் பெண்கள் வெற்றி பெற்றனர். இது, 2024ஆம் ஆண்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட 73 பெண் உறுப்பினர்களைவிட குறைவு.

குறிப்புச் சொற்கள்