நெகிரி செம்பிலானில் சூடுபிடிக்கும் தேர்தல் களம்; வேட்புமனுத் தாக்கல் தொடங்கியது

நெகிரி செம்பிலானில் சூடுபிடிக்கும் தேர்தல் களம்; வேட்புமனுத் தாக்கல் தொடங்கியது

2 mins read
f43e863f-62dd-453c-b6b9-41950611cf87
நெகிரி செம்பிலானில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. - படம்: பெர்னாமா

சிரம்பான்: மலேசியாவின் நெகிரி செம்பிலான் மாநிலத்தில் சனிக்கிழமை (ஜூலை 18) தேர்தல் நடைமுறை அதிகாரபூர்வமாகத் தொடங்கியது.

அம்மாநிலத்தில் உள்ள எட்டு வேட்புமனுத் தாக்கல் நிலையங்களில் காலை 9 மணி முதல் வேட்புமனுத் தாக்கல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

தேர்தலில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்கள், தேர்தல் அதிகாரியிடம் தங்களது வேட்புமனுக்களைச் சமர்பிக்க காலை 10 மணிவரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

அதன் பின்னர், தகுதி பெற்ற வேட்பாளர்களின் இறுதிப் பட்டியல் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும்.

அப்பட்டியல் வெளியானதும் 14 நாள் தேர்தல் பிரசாரம் முறைப்படி தொடங்கும்.

தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளபடி, ஜூலை 31ஆம் தேதி நள்ளிரவு 11.59 மணிவரை பிரசாரம் செய்யலாம்.

கடந்த ஜூன் 5ஆம் தேதி நெகிரி செம்பிலான் சட்டமன்றம் கலைக்கப்பட்டது. அதையடுத்து, முன்கூட்டியே வாக்களிப்பதற்கான தேதி ஜூலை 28 என்றும் வாக்குப்பதிவு ஆகஸ்ட் 1 என்றும் அறிவிக்கப்பட்டது.

நெகிரி செம்பிலான் தேர்தலில் மொத்தம் 889,490 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். அவர்களில் 867,151 பொது வாக்காளர்களும் 16,884 ராணுவ வீரர்கள், அவர்களின் துணைவர்களும், 5,455 காவல்துறை அதிகாரிகள், அவர்களின் துணைவர்களும் அடங்குவர்.

அனைத்துவகைச் செய்திகளும் ஒரே இடத்தில்.

இந்நிலையில், கடந்த சில நாள்களாகவே அரசியல் கட்சிகள் தங்கள் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு வந்தன.

ஆட்சி அரியணையைப் பிடிப்பதற்கான மக்கள் ஆதரவைப் பெற, நடப்பு சட்டமன்ற உறுப்பினர்களோடு புதிய முகங்களையும் கட்சிகள் களமிறக்கியுள்ளன.

பக்கத்தான் ஹரப்பான் கூட்டணி மொத்தம் உள்ள 36 தொகுதிகளிலும் போட்டியிடுகிறது. தேசிய முன்னணி 25 தொகுதிகளிலும் பெரிக்கத்தான் நேஷனல் 11 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்துகின்றன.

இது தவிர, மலேசிய ஒராங் அஸ்லி கட்சி (அஸ்லி), மலேசிய சோசலிச கட்சி, மலேசிய இஸ்லாமிய முன்னணி ஆகியவை தலா ஒரு தொகுதியில் போட்டியிடுகின்றன.

பெர்சத்து மலேசியா 24 தொகுதிகளில் களம் காண்கிறது. அவர்களில் மலேசிய மக்கள் உரிமை கட்சியைச் சேர்ந்த இரு வேட்பாளர்கள் பெர்சத்துக் கட்சியின் சின்னத்தில் போட்டியிடுகின்றனர்.

தேர்தல் சுமுகமாக நடைபெறுவதை உறுதிசெய்ய நெகிரி செம்பிலானில் 4,800 அதிகாரிகளும் காவலர்களும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்குத் துணையாக புக்கிட் அமானிலிருந்து 1,373 காவலர்களும் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

வேட்புமனுத் தாக்கலை முன்னிட்டு வேட்பாளர்களுடன் கட்சியின் ஆதரவாளர்கள், தலைவர்கள், அரசியல் பேராளர்கள் பெருந்திரளாகத் திரண்டு நிலையங்களுக்குச் செல்வதால் தேர்தல் களம் பரபரப்பாகக் காணப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்