மின்கட்டண நிவாரண உதவி; மலேசிய அரசாங்கம் பரிசீலனை

மின்கட்டண நிவாரண உதவி; மலேசிய அரசாங்கம் பரிசீலனை

1 mins read
b217357f-5e3e-4e6c-8bbf-471504906931
அண்மையில் மின்சாரக் கட்டணங்கள் திடீரென உயர்ந்திருப்பது குறித்து பொதுமக்கள் தெரிவித்து வரும் கவலைக்கு உடனடியாகத் தீர்வு காணப்பட வேண்டும் என்று மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம் தெரிவித்தார். - படம்: தமிழ் முரசு

கோலாலம்பூர்: மலேசியாவில் புகைமூட்டம் மற்றும் வெப்பமான வானிலை காரணமாக வீடுகளில் மின்சாரப் பயன்பாடு அதிகரித்துள்ளது. மின்கட்டண உயர்வால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களின் சுமையைக் குறைக்கும் வகையில், உடனடித் தணிப்பு நடவடிக்கைகளை ஆராய்வதற்காக மலேசிய அரசாங்கம் வியாழக்கிழமை (செப்டம்பர் 17) சிறப்புக்கூட்டம் ஒன்றை நடத்தவுள்ளது.

அண்மையில் மின்சாரக் கட்டணங்கள் திடீரென உயர்ந்திருப்பது குறித்து பொதுமக்கள் தெரிவித்து வரும் கவலைக்கு உடனடியாகத் தீர்வு காணப்பட வேண்டும் என்று மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம் கூறினார்.

இந்தியா, மாலத்தீவு ஆகிய நாடுகளுக்கான தங்களது அதிகாரபூர்வப் பயணத்தை முடித்துக்கொண்டு திரும்பியதும் மின் கட்டண உயர்வு தொடர்பில் மக்கள் கொண்டுள்ள கவலைகள் உடனடியாகத் தமது கவனத்திற்கு வந்ததாகப் பிரதமர் தெரிவித்தார்.

மக்களின் புகார்களைத் தாம் செவிமடுத்திருப்பதாகவும் இந்த விவகாரத்துக்கு உடனடியாகக் கவனம் செலுத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

மக்களின் நலனுக்கும் மேம்பாட்டிற்கும் என்றும் முன்னுரிமை அளிக்கப்படும் என்று குறிப்பிட்ட பிரதமர் அன்வார், இலக்குமுறை மானியங்கள் நியாயமான முறையிலும் உகந்த வகையிலும் நடைமுறைப்படுத்தப்படுவதை அரசாங்கம் தொடர்ந்து உறுதி செய்யும் என்றும் உறுதியளித்தார்.

குறிப்புச் சொற்கள்
மலேசியாபுகைமூட்டம்அன்வார் இப்ராகிம்மின்சாரம்கட்டணம்