பாரிஸ்: உலகெங்குமுள்ள தரவு நிலையங்களின் மின்சாரப் பயன்பாடு 2030ஆம் ஆண்டுக்குள் கிட்டத்தட்ட இரட்டிப்பாகும் என்று அனைத்துலக எரிசக்தி அமைப்பு வியாழக்கிழமை (ஏப்ரல் 10) தெரிவித்துள்ளது.
செயற்கை நுண்ணறிவு நடைமுறைகள் இதற்குக் காரணமாகும் என்றும் இதனால் எரிசக்திப் பாதுகாப்பு, கரியமில வாயு வெளியேற்றம் தொடர்பான இலக்குகளை எட்டுவதற்குப் புதிய சவால்களை எதிர்கொள்ள நேரிடும் என்றும் அமைப்பு கூறியது.
அதேநேரத்தில், மின்சாரத்தை மேலும் செயல்திறனுடன் உற்பத்தி செய்யவும் பயன்படுத்தவும் வழிவகுக்கும் புதிய வாய்ப்புகளையும் செயற்கை நுண்ணறிவு உருவாக்கக்கூடும் என்று அமைப்பு குறிப்பிட்டது.
எரிசக்தித் துறை மீதான செயற்கை நுண்ணறிவின் தாக்கம் குறித்த முதல் அறிக்கையை அது வெளியிட்டுள்ளது.
கடந்த ஆண்டு (2024) உலகின் ஒட்டுமொத்த மின்சாரப் பயன்பாட்டில் தரவு நிலையங்களின் பங்கு 1.5 விழுக்காடு ஆகும். கடந்த ஐந்து ஆண்டுகளில் ஆண்டுக்கு 12 விழுக்காடு என்ற விகிதத்தில் அது அதிகரித்ததாகக் கூறப்பட்டது.
தரவு நிலையங்களின் மின்சாரப் பயன்பாட்டில் அமெரிக்கா, ஐரோப்பா, சீனா ஆகியவற்றின் பங்கு கிட்டத்தட்ட 85 விழுக்காடு என்று கூறப்பட்டது.
கூகல், மைக்ரோசாஃப்ட், அமேசான் போன்ற பெருநிறுவனங்கள் அவற்றின் தரவு நிலையங்களில் பயன்படுத்தப்படும் மின்சாரத்துக்கு அணுமின்சக்தியை நாடுவதாகத் தகவல்கள் கூறுகின்றன.
தற்போதைய போக்கு நீடித்தால், 2030ஆம் ஆண்டுக்குள் உலகின் ஒட்டுமொத்த மின்சாரப் பயன்பாட்டில் தரவு நிலையங்களின் பங்கு ஏறக்குறைய மூன்று விழுக்காடாக அதிகரிக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

