மிகவும் பலம் வாய்ந்ததாகப் போற்றப்படும் உலகின் ஆகப் பெரிய நிலப் பாலூட்டிகளான யானைகள், பல நாடுகளில் கடுமையான வேலைக்கும் மனிதர்களைச் சுமந்து செல்லவும் பயன்படுத்தப்படுகின்றன.
அவ்வாறு கடுமையாக உழைத்த 71 வயது யானை ஒன்று, பல ஆண்டுகளாக சுற்றுப்பயணிகளை தன் முதுகில் சுமந்து சென்றதன் காரணமாக அதன் முதுகுத் தண்டு சரிந்து காணப்படுகிறது.
ஒவ்வோரு முறையும் ஆறு சுற்றுப்பயணிகளை கடந்த 25 ஆண்டுகளாகச் சுமந்துசென்ற பாய் லின் எனும் 71 வயது யானையின் தோற்றம் இப்போது பரிதாபத்துக்குரியதாகிவிட்டது என்று தாய்லாந்து வனவிலங்கு நண்பர்கள் அறநிறுவனத்தின் பேச்சாளரான ஏமி ஜோன்ஸ் கூறுகிறார்.
பயணிகளைச் சுமந்து செல்வதன் காரணமாக யானைகளின் உடலில் தொடர்ந்து அழுத்தம் ஏற்படுவதால், அவற்றின் எலும்புகளும் திசுக்களும் நாளடைவில் பாதிப்படைகின்றன.
தென்கிழக்காசியா முழுவதும் விலங்கியல் தோட்டங்கள் போன்ற சுற்றுலாத் தளங்களில் யானை சவாரிகள் வழக்கமாகக் காணப்படும் அம்சங்களில் ஒன்று. இந்நிலையில், டிக்டாக் வலைத்தளத்தில் #elephantride எனும் ஹேஷ்டேக் எட்டு மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது.
சிங்கப்பூர் விலங்கியல் தோட்டத்தைப் பொறுத்தமட்டில், 2015ல் யானை சவாரிகளை அது நிறுத்திக்கொண்டது. பார்வையாளர் நிகழ்ச்சிகளில் மிகக் கனமான மரக்கட்டைகளைத் தூக்குவது போன்ற யானை சாகச அங்கங்கள் 2018ல் நிறுத்தப்பட்டன. மாறாக, இயல்பான நடத்தையை வெளிப்படுத்த யானைகள் ஊக்குவிக்கப்படுகின்றன.

