குளுவாங்கில் உள்ள குடியிருப்புப் பகுதியில் சுற்றித் திரிந்த யானை

1 mins read
db4988cc-60e6-4e64-a440-8f5df66c6837
யானை தும்பிக்கையை அசைத்தபடி சாலையில் நடந்துசென்று வீடுகளைக் கடந்துசென்றதைக் காட்டும் 40 வினாடிக் காணொளி சமூக ஊடகத்தில் பதவிவேற்றம் செய்யப்பட்டது. - படங்கள்: இன்ஸ்டகிராம்

குளுவாங்: மலேசியாவின் ஜோகூர் மாநிலத்தில் உள்ள குளுவாங் நகரின் குடியிருப்புப் பகுதியில் யானை ஒன்று சுற்றித் திரிந்ததைக் காட்டும் காணொளி பலரை ஆச்சரியப்பட வைத்துள்ளது.

ஒரு மாடி உயரம் இருந்த அந்த யானை, தாமான் ஸ்ரீ இம்பியான் குடியிருப்புப் பகுதியில் காணப்பட்டது.

அந்த யானை தும்பிக்கையை அசைத்தபடி சாலையில் நடந்துசென்று வீடுகளைக் கடந்துசென்றதைக் காட்டும் 40 வினாடிக் காணொளி சமூக ஊடகத்தில் பதவிவேற்றம் செய்யப்பட்டது.

அந்தக் காணொளி திங்கட்கிழமை (ஜனவரி 27) அதிகாலை 2.13 மணி அளவில் பதிவு செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

அந்த யானை எங்கிருந்து வந்தது என்றும் அது அந்தக் குடியிருப்புப் பகுதியை எவ்வாறு அடைந்தது என்றும் தெரியவில்லை.

யானை கவலையுடன் காணப்பட்டதாகக் காணொளியைப் பார்த்த பலர் கருத்து தெரிவித்தனர்.

அதுகுறித்து அவர்கள் அக்கறை தெரிவித்தனர்.

“ஒருவேளை தற்போது குடியிருப்புப் பகுதியாக இருக்கும் அந்த இடம் முன்பு அந்த யானை வசித்து வந்த வனப்பகுதியாக இருந்திருக்கக்கூடும்,” என்று இணையவாசி ஒருவர் குறிப்பிட்டார்.

ஆலைகள், வீடுகள் ஆகியவற்றைக் கட்ட வனப்பகுதிகள் அழிக்கப்படுவதாகவும் அவ்வாறு நிகழும்போது யானைகள் வசிப்பிடமின்றி தவிப்பதாகவும் பலர் தெரிவித்தனர்.

யானைகளின் வசிப்பிடங்கள் அழிக்கப்படுவதால் அவை இதுபோன்ற குடியிருப்புப் பகுதிகளுக்குள் நுழையும்போது அவற்றைக் குறை சொல்ல முடியாது என்று அவர்கள் கூறினர்.

குறிப்புச் சொற்கள்