கொழும்பு: இலங்கையில் யானை கடத்தல் தொடர்பாக முதல் நபர் தண்டிக்கப்பட்டுள்ளார்.
நீரஜ் ரோஷன் என்னும் யானைப் பாகன் யானைக் குட்டி ஒன்றைத் திருடியுள்ளார். யானையைச் சட்டப்பூர்வமாக வாங்கியதாகப் போலி ஆவணமும் அவர் தயாரித்துள்ளார்.
நீரஜுக்கு 15 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் 87,300 வெள்ளி அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் நீரஜ்மீது வழக்குத் தொடுக்கப்பட்டு தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
யானைக் கடத்தலில் மக்கள் ஈடுபடக் கூடாது என்பதற்காக இந்தக் கடுமையான தண்டனை விதிக்கப்பட்டதாக இலங்கை உயர் நீதிமன்றம் தெரிவித்தது.
இந்த வழக்கு தொடர்பில் மேலும் ஏழு பேர் விசாரிக்கப்பட்டனர். ஆனால் போதிய ஆதாரம் இல்லாததால் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.
இலங்கையில் கடந்த 10 ஆண்டில் மட்டும் கிட்டத்தட்ட 40 யானைக் குட்டிகள் அதனதன் தாயிடமிருந்து திருடப்பட்டதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
கடத்தப்பட்ட யானைக் குட்டிகள் ஒவ்வொன்றும் 160,000 வெள்ளிக்கு விற்பனை செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.