இலோன் மஸ்க் : எனக்குப் பதில் ஒரு முட்டாள் கிடைத்ததும் டுவிட்டரிலிருந்து பதவி விலகுவேன்

இலோன் மஸ்க் : எனக்குப் பதில் ஒரு முட்டாள் கிடைத்ததும் டுவிட்டரிலிருந்து பதவி விலகுவேன்

2 mins read
0e3a0202-c4ec-4b69-92dd-62ecdb58c4c6
டுவிட்டரை வாங்கி அதன் தலைமை நிர்வாகியாகப் பொறுப்பு ஏற்றுள்ள இலோன் மஸ்க். கோப்புப் படம்: ராய்ட்டர்ஸ் -

டுவிட்டர் தளத்தின் தலைமை நிர்வாகி பதவியிலிருந்து விலகத் தயார் என்று இலோன் மஸ்க் கூறியுள்ளார்.

அந்த "வேலையை எடுத்துக்கொள்ளும் அளவுக்கு முட்டாள் ஒருவரைக் கண்டுபிடித்த பின்னர்" தான் பதவி விலகுவதாக திரு மஸ்க் கூறியுள்ளார்.

தாம் பதவியில் இருப்பதா வேண்டாமா என்ற கேள்வியைக் கேட்டு தமது டுவிட்டர் பக்கத்தில் கருத்தாய்வு நடத்தினார் திரு மஸ்க்.

அதில் 57.5 விழுக்காட்டு டுவிட்டர் பயனாளர்கள் திரு மஸ்க் பதவி விலக வேண்டும் என்று கூறியிருந்தனர்.

அடுத்த தலைமை நிர்வாகி கண்டறியப்பட்ட பின்னரும் மென்பொருள் போன்ற சில முக்கிய துறைகளுக்கு தாமே பொறுப்பு வகிக்கப் போவதாக அவர் கூறினார்.

இதற்கு முன்னர் டுவிட்டரில் நடத்தப்பட்ட கருத்தாய்வுகளின்படி திரு மஸ்க் செயல்பட்டிருக்கிறார்.

ஆனால் இப்போதோ, கோட்டை அழித்துவிட்டு புதிய கோடு வரைந்திருக்கிறார்.

டுவிட்டருக்கு பணம் தந்து சந்தாதாரர்களாகி, நீல நிற டிக் உள்ள கணக்குகள் வைத்திருப்பவர்கள் மட்டும் வருங்காலத்தில் கருத்தாய்வுகளில் பங்குபெற முடியும் என்று அவர் கூறியுள்ளார்.

கடந்த அக்டோபர் மாதம் திரு மஸ்க் டுவிட்டரை வாங்கினார்.

டுவிட்டருக்கு அப்போது தொடங்கியது போதாத காலம்.

டுவிட்டரின் ஊழியர்கள் பாதி பேரை வேலையிலிருந்து நீக்கினார் திரு மஸ்க்.

சந்தா செலுத்துபவர்களின் கணக்குகள் மட்டுமே உண்மையான கணக்குகள் என்று அங்கீகரிக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

அவர் கைக்கு டுவிட்டர் சென்ற பின்னர் வன்முறையும் வெறுப்பும் நிறைந்த உரையாடல்கள் அத்தளத்தில் அதிகரித்துள்ளதாகக் குறைகூறப்பட்டு வருகிறது.