கோலாலம்பூர்: ஜாலான் மஸ்ஜித் இந்தியா அருகே, அரியானி இல்லத்திற்கு வெளியே தரையோடுகள் உள்வாங்கியது தொடர்பில் இணையத்தில் பரவிவரும் படங்கள் குறித்து கோலாலம்பூர் நகர மன்றம் விளக்கமளித்துள்ளது.
ஆயினும், இலேசாகத்தான் உள்வாங்கியுள்ளது என்றும் சிலாங்கூர் நீர் விநியோக நிறுவனம் (சியாபஸ்) முன்னதாக மேற்கொண்ட குழாய் பழுதுபார்ப்புப் பணிகளால் அது நிகழ்ந்திருக்கலாம் என்றும் நகர மண்டபம் தெரிவித்தது.
“இது குறித்து சியாபஸ் அமைப்பிற்குத் தெரியப்படுத்திவிட்டோம். அவ்விடத்தில் பழுதுபார்ப்புப் பணிகள் உடனடியாக மேற்கொள்ளப்படும். மூன்று நாள்களுக்குள் அப்பணிகள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது,” என்று வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 30) ஃபேஸ்புக் வழியாக நகர மண்டபம் தெரிவித்திருக்கிறது.
கடந்த வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 23) இந்தியாவைச் சேர்ந்த ஜி. விஜயலட்சுமி, 48, என்ற சுற்றுப்பயணி ஜாலான் மஸ்ஜித் இந்தியா வழியாக நடந்துசென்றபோது, தரையில் திடீரென எட்டு மீட்டர் ஆழத்திற்குப் பெருங்குழி உருவாகி, அதனுள் அவர் விழ நேர்ந்தது. இன்னும் அவர் கண்டுபிடிக்கப்படவில்லை.
அவரைத் தேடி, மீட்கும் பணிகள் எட்டாம் நாளாகத் தொடர்கின்றன. ஆயினும், அபாயம் அதிகம் என்பதால் இனியும் முக்குளிப்பாளர்களை அப்பணியில் ஈடுபடுத்தப்போவதில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வெள்ளிக்கிழமை காலை 5 மணியளவில் தற்காலிகமாக நிறுத்தப்பட்ட தேடி, மீட்கும் பணி, சில மணி நேரத்திற்குப்பின் மீண்டும் தொடங்கியது.
மலேசியக் காவல்துறை, தீயணைப்பு, மீட்புப் படை, கோலாலம்பூர் நகர மன்றம், கனிமவள, நிலவியல் துறை ஆகியவற்றைச் சேர்ந்தவர்களைக் காலை 8 மணியளவில் நிகழ்விடத்தில் கண்டதாக பெர்னாமா செய்தி வெளியிட்டுள்ளது.
கழிவுநீர் செல்லும் வழியில் வியாழக்கிழமையன்று கண்டுபிடிக்கப்பட்ட 15 மீட்டர் நீள அடைப்பை அகற்றும் பணியில் அவர்கள் கவனம் செலுத்துவதாக அறியப்படுகிறது.
தொடர்புடைய செய்திகள்
இச்சம்பவத்தையடுத்து, அப்பகுதியைச் சேர்ந்த வணிகர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். வியாழக்கிழமையும் அப்பகுதியில் பல கடைகள் மூடப்பட்டிருந்ததாகவும் கட்டடங்களுக்குள் உள்ள கடைகளே திறந்திருந்ததாகவும் பெர்னாமா செய்தி குறிப்பிட்டது.