கோலா பெராங்: மலேசியாவில் ஏபிஐ குறியீடு 400ஐத் தாண்டும் பகுதிகளில் அவசரநிலை அறிவிக்க அந்நாட்டு அரசாங்கம் தயாராக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மலேசியாவில் பொதுவாக ஏபிஐ குறியீடு 400க்கு மேல் இருக்கும்போது இதுவே செயல்பாட்டில் இருக்கும் நடைமுறையாகும். செரியான் போன்ற பகுதிகளில் ஏற்பட்டதுபோல், காற்றின் தரத்தைக் கணக்கிடும் ஏபிஐ குறியீடு மிக அபாயகரமான கட்டத்தைத் தொட்டால் அவசரநிலை அறிவிப்பது குறித்து ஆலோசிக்கப்படும் என்று மலேசிய இயற்கை வளங்கள், சுற்றுப்புற நீடித்த நிலைத்தன்மை அமைச்சர் ஆர்த்தர் ஜோசஃப் குருப் கூறினார்.
செரியான், சரவாக் ஆகியவற்றில் ஏபிஐ குறியீடு 500ஐத் தாண்டியது. அதனால் அங்கு அவசரநிலை அறிவிக்கப்பட்டது.
“(குறியீடு) 400ஐத் தாண்டினால் அது மிக அபாயகரமான நிலையாகும். அதனால், அவசரநிலை அறிவிப்பது குறித்து ஆலோசிக்கப்படலாம்,” என்று சனிக்கிழமை (செப்டம்பர் 5) நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டபோது திரு ஆர்த்தர் செய்தியாளர்களிடம் பேசினார்.
மூன்று இடங்களில் காற்றின் தரம் மிக மோசம்
நாடு முழுவதும் உள்ள 68 ஏபிஐ குறியீட்டுக் கண்காணிப்பு நிலையங்களில் மூன்றில் மட்டுமே குறியீடு மிக ஆரோக்கியமற்ற நிலையைத் தொட்டதாக அவர் தெரிவித்தார். சரவாக் மாநிலத்தில் கூச்சிங், சமரஹன், ஸ்ரீ அமான் ஆகியவை அந்த மூன்று பகுதிகள். செரியானில் காற்றின் தரம் அபாயக் கட்டத்தில் இருந்தது.
ஏபிஐ குறியீடு பாதுகாப்பான நிலைக்குக் குறையும் வரை அவசரநிலை தொடர்ந்து நடப்பில் இருக்கும் என்று திரு ஆர்த்தர் சொன்னார். அவசரநிலையின்போது பள்ளி மூடல், முகக்கவசம் அணிவது போன்ற பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
செரியானில் அவசரநிலை
செரியானில் காற்றின் தரம் பொதுமக்களின் ஆரோக்கியத்துக்கும் பாதுகாப்புக்கும் பங்கம் விளைவிக்கும் அளவு அதிகரித்ததால் அங்கு அவசரநிலை அறிவிக்கப்பட்டதாக வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 4) அறிவிக்கப்பட்டது.
இதற்கிடையே, சரவாக், கெடா, பெர்லிஸ் ஆகியவற்றில் செயற்கை முறையில் மழை பெய்யச் செய்யும் நடவடிக்கைகள் பலனளித்திருப்பதாக திரு ஆர்த்தர் தெரிவித்தார். பல இடங்களில் மழை பெய்ததாக அவர் கூறினார்.
அதோடு, செயற்கை முறையில் மழை பெய்வதற்கு சம்பந்தப்பட்ட தங்களின் பொருள்கள் இந்தோனீசிய ஆகாயவெளிக்குள் நுழைய இந்தோனீசிய அரசாங்கம் எழுத்து வடிவில் ஒப்புதல் அளித்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.


