ஜோகூர் பள்ளிகளில் துன்புறுத்தல் போக்கைக் கையாள வழக்கத்துக்கு மாறான நடவடிக்கைக்கு வலியுறுத்தல்

ஜோகூர் பள்ளிகளில் துன்புறுத்தல் போக்கைக் கையாள வழக்கத்துக்கு மாறான நடவடிக்கைக்கு வலியுறுத்தல்

படம்: த ஸ்டார்

20 Nov 2026 - 12:27 pm

2 mins read

ஜோகூர் பாரு: இந்த ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில், ஜோகூர் மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிகளில் மொத்தம் 773 துன்புறுத்தல் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

இந்தப் பிரச்சினையைத் தீர்க்க பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்ட போதிலும், சம்பவங்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகமாகவே உள்ளது என்றும் பள்ளிகளில் பாதுகாப்பை உறுதிசெய்ய வழக்கத்துக்கு மாறான நடவடிக்கைகள் தேவை என்றும் மாநிலக் கல்வி, தகவல் குழுத் தலைவர் டாக்டர் முஹம்மது நகீப் முகம்மது கசாலி தெரிவித்தார்.

வெள்ளிக்கிழமை (நவம்பர் 20) நடைபெற்ற மாநிலச் சட்டமன்றக் கூட்டத்தில் பேசிய அவர், “2023ஆம் ஆண்டில் ஜோகூரில் மொத்தம் 984 துன்புறுத்தல் சம்பவங்கள் பதிவாகின. 2024ஆம் ஆண்டில் 1,080 சம்பவங்கள் பதிவாகியுள்ளன. அதற்கு முந்தைய ஆண்டில் 327 சம்பவங்கள் பதிவாகியிருந்தன,” என்று குறிப்பிட்டார்.

“இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வரை 773 புகார்கள் வந்துள்ளன. இந்தப் புள்ளிவிவரங்கள் கவலைக்குரிய போக்கைக் காட்டுகின்றன. துன்புறுத்தல் சம்பவங்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகமாகவே உள்ளது.

“எனவே, ‘வழக்கமான நடைமுறைகள்’ இனி போதா. பள்ளிகளில் பாதுகாப்பு தொடர்பான சிக்கல்கள் சிறப்பாகக் கையாளப்படுவதை உறுதிசெய்ய, வழக்கத்துக்கு மாறான நடவடிக்கைகள் தேவைப்படுகின்றன,” என்றார் அவர்.

ஜோகூர் மாநிலத்தில் நடைபெறும் வன்முறை அல்லது துன்புறுத்தல் சம்பவங்கள் குறித்து ஸுல்கர்னைன் கமிசான் (பாரிசான் நேஷனல்-ஸ்ரீ மேடான்), செலாமாட் தாகிம் (பாரிசான் நேஷனல்-சுங்கை பாலங்), சூ போ யீ (பக்கத்தான் ஹரப்பான்-மெங்கிபோல்) ஆகியோர் கேள்வி எழுப்பியிருந்தனர்.

மாநிலக் கல்வித் துறை, மாவட்டக் கல்வி அலுவலகங்கள், பள்ளிகளுடன் இணைந்து பல முன்னெடுப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக டாக்டர் நகீப் தெரிவித்தார்.

காவல்துறை, தேசிய போதைப்பொருள் தடுப்பு அமைப்பு, ஆலோசகர்கள், அரசு சாரா அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரை உள்ளடக்கிய ஒரு கலந்துரையாடல் குழு அமைக்கப்பட்டுள்ளது.

“ஜோகூர் மாநிலப் பள்ளிகள் பாதுகாப்பானவை என்பதை உறுதிப்படுத்த, தகவல்களைச் சேகரிப்பதும், மேலும் விரிவான தீர்வுகளை உருவாக்குவதுமே இதன் நோக்கமாகும்,” என்று அவர் கூறினார்.

பள்ளிகளில் பதிவாகும் சம்பவங்கள் குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதை கட்டாயமாக்கும் வகையில், கல்வி அமைச்சு நிலையான செயல்பாட்டு நடைமுறைகளை உருவாக்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

பள்ளிகளில் தங்களின் புகார்கள் முறையாகக் கையாளப்படவில்லை என்றால், மாணவர்கள் அல்லது பெற்றோர் நேரடியாகக் காவல்துறையிடம் துன்புறுத்தல் சம்பவங்கள் குறித்துப் புகார் அளிக்க வேண்டும் என்று டாக்டர் நகீப் வலியுறுத்தினார்.

குறிப்புச் சொற்கள்
துன்புறுத்தல்பள்ளிநடவடிக்கை