மருத்துவ விடுப்பெடுக்க முதலாளி மறுத்தபின் ஊழியர் மரணம்

மருத்துவ விடுப்பெடுக்க முதலாளி மறுத்தபின் ஊழியர் மரணம்

2 mins read
c55ccd9c-3960-4f1b-a944-5181878f32aa
வேலை தொடங்கி 20 நிமிடங்களில் ஊழியர் தரையில் சரிந்து விழுந்தார். - படம்: சாவ் பாவ்

தொழிற்சாலை ஊழியர் ஒருவருக்கு அவரின் முதலாளி மேலும் ஒரு நாள் மருத்துவ விடுப்பு தர மறுத்ததை அடுத்து அந்தப் பெண் ஊழியர் தமது வேலையிடத்தில் சரிந்து விழுந்து உயிரிழந்தார்.

தாய்லாந்தின் சுகோதாய் பகுதியைச் சேர்ந்த அந்த 30 வயது ஊழியரின் பெயர் மே. அவர் முவாங் மாவட்டத்தில் உள்ள மின்னணு ஆலை ஒன்றில் ஊழியராக இருந்தார்.

முதலில் செப்டம்பர் 5 முதல் 9 வரை மே மருத்துவச் சான்றிதழுடன் விடுப்பு எடுத்திருந்தார். அவரது பெருங்குடலில் வீக்கம் இருந்தது. நான்கு நாள்கள் அவர் மருத்துவமனையில் இருந்தார்.

மருத்தவமனையிலிருந்து வீடு திரும்பிய மே, தாம் இன்னும் குணமடையவில்லை என்று தமது நண்பரிடம் கூறினார்.

அதையடுத்து செப்டம்பர் 12ஆம் தேதி மாலை, தமது உடல்நிலை இன்னும் மோசமடைந்துவிட்டதாகக் கூறி மறுநாள் மருத்துவ விடுப்பு வேண்டும் என்று மே அவரின் முதலாளியிடம் கோரினார்.

ஆனால், அதிக மருத்துவ விடுப்பு எடுத்துவிட்டதால் முதலில் மே வேலைக்கு வந்து இன்னொரு மருத்துவச் சான்றிதழைச் சமர்ப்பிக்க வேண்டும் என்று அந்த முதலாளி கூறிவிட்டார்.

இந்தப் பெருங்குடல் வீக்கத்திற்குமுன் மே மருத்துவ விடுப்பே எடுத்ததில்லை என்று அவரின் நண்பர்கள் கூறியுள்ளனர்.

வேலை போய்விடும் என்று அஞ்சி, நோய்வாய்ப்பட்ட நிலையிலும் மே செப்டம்பர் 13ஆம் தேதி வேலைக்குச் சென்றார். வேலை தொடங்கி 20 நிமிடங்களில் அவர் தரையில் சரிந்து விழுந்தார்.

மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட அவருக்கு, அவசர அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

இருப்பினும், அதற்கு மறுநாள் மாலை மே இறந்துவிட்டார். அதையடுத்து, ‘டெல்டா இலெக்டிரானிக்ஸ் தாய்லாந்து’ நிறுவனம் மேயின் மரணம் குறித்து ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டு அதன் அனுதாபங்களைத் தெரிவித்திருந்தது.

ஊழியரின் மரணம் குறித்து என்ன நடந்தது என்பதை நிறுவனம் கண்டறியும் நிலையில் உள்ளதாகக் கூறியது. அத்துடன் தீவிர விசாரணை நடத்த முனைந்துள்ளது.

இருப்பினும், நிறுவனம் மேக்கு மருத்துவ விடுப்பு தர மறுத்ததால் அவர் உயிரிழந்தார் என்று மேயின் வேலையிட நண்பர்களின் உரையாடல் பதிவுகள் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில், இணையவாசிகள் நிறுவனத்தை வெகுவாகச் சாடியுள்ளனர்.

குறிப்புச் சொற்கள்