சிரம்பான்: மலேசியாவில் உணவகம் ஒன்றின் ஊழியர், மீந்துபோன உணவைத் தண்ணீரில் அலசுவது போன்ற காணொளி இணையத்தில் பரவியது.
அதனையடுத்து, அவ்வுணவகத்தை இரு வாரங்களுக்கு மூட நெகிரி செம்பிலான் சுகாதாரத் துறை உத்தரவிட்டது.
உணவுப் பாதுகாப்பு விதிமுறைகளை மீறியதற்காகவும் சுகாதாரமற்ற நடைமுறைகளைக் கடைப்பிடித்ததற்காகவும் அவ்வுணவகத்தின் உரிமையாளருக்கு அபராதமும் விதிக்கப்பட்டதாக அது தெரிவித்தது.
“பிப்ரவரி 3ஆம் தேதி கோழி, ஆடு ஆகியவற்றின் இறைச்சியையும் ‘டோஃபு’ போன்ற பொருள்களையும் கொண்ட விற்கப்படாத உணவை உணவக ஊழியர் ஒருவர் தண்ணீரில் அலசுவது போன்ற காணொளி பரவலானது. அதனைத் தொடர்ந்து நாங்கள் அவ்வுணவகம் குறித்த விசாரணையைத் தொடங்கினோம்,” என அத்துறை புதன்கிழமையன்று (பிப்ரவரி 4) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.
1983ஆம் ஆண்டு உணவுப் பாதுகாப்புச் சட்டப் பிரிவு 11ன் கீழ், அவ்வுணவகத்தை பிப்ரவரி 17ஆம் தேதிவரை மூட உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் அவ்வுணவகத்தின் உரிமையாளருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அது குறிப்பிட்டது.

