தோக்கியோ: ஊழியர்கள் சிலர் அளவிற்கு மீறி மது அருந்துவதால் ஜப்பானிய நிறுவனம் ஒன்று தனது சொகுசு ரயில் பயணத்தையே ரத்து செய்வதாக அறிவித்துள்ளது.
“தரக் கட்டுப்பாட்டுச் சோதனை என்ற பெயரில் எங்கள் சிப்பந்திகளில் சிலர் அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகமாக மது அருந்துவதை வாடிக்கையாகக் கொண்டிருந்தனர்,” என்று கிழக்கு ஜப்பான் ரயில்வே (ஜேஆர் ஈஸ்ட்) நிறுவனத்தின் துணை நிறுவனமான ‘ஜேஆர் ஈஸ்ட் வியூ சுற்றுலா மற்றும் விற்பனை’ நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஷிக்கி-ஷிமா என்ற அந்த ரயில் சேவையின் ஊழியர்கள் கடந்த 2022 செப்டம்பரில் இருந்தே அத்தவறான நடத்தையில் ஈடுபட்டு வந்துள்ளதாகக் கூறப்பட்டது.
“இது எங்கள் தொழிலின்மீதான நம்பிக்கையைக் கீழறுப்பதாக அமைந்துள்ளது. எங்கள் விருந்தினர்களைக் கவனிப்பதை மேற்பார்வை செய்ய வேண்டிய நிலையில் உள்ளோரின் அத்தகைய நடத்தையை ஏற்றுக்கொள்ளவே முடியாது,” என்று ஜேஆர் ஈஸ்ட் வியூ நிறுவனம் தெரிவித்துள்ளது.
தவறிழைத்த ஊழியர்கள் அறுவர் பணியிலிருந்து அகற்றப்பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதனையடுத்து, ஜேஆர் ஈஸ்ட் வியூ நிறுவனத்திற்கு ஊழியர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது.
இதனையடுத்து, ஆகஸ்ட் 30ஆம் தேதி தொடங்கவிருந்த ஷிக்கி-ஷிமா ரயில் பயணம் ரத்து செய்யப்பட்டுவிட்டதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
இரண்டு இரவும் ஒரு பகலும் அடங்கிய அப்பயணத்திற்கான கட்டணம் 3,000 அமெரிக்க டாலர் (S$3,900). பிரெஞ்சு உணவு, விலைமிக்க ஒயின் பானம் உள்ளிட்ட விருந்தோம்பலுடன் ஒயின் தொழிற்சாலை சுற்றுப்பயணமும் அப்பயணத்தில் அடங்கும்.
ரயில் பயணம் ரத்து செய்யப்பட்டதற்காக ஜேஆர் ஈஸ்ட் நிறுவனம் பயணிகளிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டுள்ளது.