தாய்லாந்தில் மியன்மார் அகதிகளுக்கு வேலைவாய்ப்பு

தாய்லாந்தில் மியன்மார் அகதிகளுக்கு வேலைவாய்ப்பு

2 mins read
752558f3-d11a-40d6-8d3e-cdcd5aacdfb4
பங்ளாதேஷின் காக்ஸ் பஜாரில் உள்ள ரோஹிங்கியா அகதிகள் முகாமிற்குள் அமைந்துள்ள சாலையோரச் சந்தை. - படம்: ராய்ட்டர்ஸ்

பேங்காக்: தாய்லாந்து எல்லையில் உள்ள முகாம்களில் வசிக்கும் 5,500க்கும் மேற்பட்ட மியேன்மார் அகதிகள் தற்போது வேலை செய்து வருகின்றனர்.

வேலைவாய்ப்பு தொடர்பான கட்டுப்பாடுகளை 2025ல் தாய்லாந்து தளர்த்தியதிலிருந்து அவர்கள் வேலைகளைக் கண்டறிந்துள்ளனர்.

இந்த அணுகுமுறை, ஆசிய வட்டாரத்திற்கு ஒரு முன்னுதாரணமாகத் திகழ்வதாக ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகள் விவகாரங்களை நிர்வகிக்கும் மூத்த அதிகாரி ஒருவர் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.

உலகளாவிய மனிதாபிமான நிதியுதவியில் ஏற்பட்ட கூர்மையான சரிவுக்குப் பதிலளிக்கும் விதமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் வெளிநாட்டு உதவிகளைக் குறைத்தது, கம்போடியாவுடனான தாய்லாந்தின் ஆயுத மோதல்களால் மோசமடைந்த தொழிலாளர் பற்றாக்குறையை எதிர்கொண்டது ஆகியவை காரணங்களாக உள்ளன.

இதன் விளைவாக, மியேன்மாரிலிருந்து வந்த கிட்டத்தட்ட 80,000 அகதிகளைச் சட்டபூர்வமாக வேலை செய்யத் தாய்லாந்து அனுமதி தந்துள்ளது.

இரு நாட்டு எல்லையில் உள்ள ஒன்பது முகாம்களில் மனிதாபிமான உதவியைச் சார்ந்து வாழ்ந்த மக்களுக்கு இந்தக் கொள்கை மாற்றம் மிகுந்த நன்மையைத் தருகிறது.

நீண்டகால இடப்பெயர்வுச் சிக்கலுடன் போராடும் தென்கிழக்கு ஆசியாவின் பிற நாடுகளுக்குத் தாய்லாந்தின் முயற்சிகள் முன்மாதிரியாக அமையக்கூடும் எனப் பாராட்டப்பட்டுள்ளது.

அதிக அளவிலான அகதிகளைக் கொண்ட பங்ளாதேஷ், மலேசியா போன்ற நாடுகளுக்கு இந்த அணுகுமுறை, படிப்பினைகளை வழங்கக்கூடும். சட்டப் பாதுகாப்புகளுடன், அரசாங்கத்தின் மேற்பார்வையின் கீழ் இருந்துகொண்டே அவர்கள் பொருளியலுக்கு எவ்வாறு பங்களிக்க முடியும் என்பதை இது காட்டுகிறது.

அக்டோபரில் இத்திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து, அகதித் தொழிலாளர்கள் சட்டப் பாதுகாப்புகள், சுகாதாரக் காப்பீடு, குறைந்தபட்ச ஊதியம் ஆகியவற்றைப் பெறுவதை உறுதி செய்வதற்காகத் தாய்லாந்து அதிகாரிகள் முதலாளிகளுடன் இணைந்து பணியாற்றி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இந்த முயற்சியின் ஒரு பகுதியாக, அகதிகள் வங்கிக் கணக்குகளைத் திறக்கவும், மொபைல் சிம் கார்டுகளைப் பெறவும், அவர்களின் சட்டபூர்வ நிலையைச் சரிபார்க்கவும் சிறப்பு அடையாள அட்டைகளைப் பெறுகின்றனர். தாய்லாந்தின் முறையான பொருளியலில் அவர்களை ஒருங்கிணைப்பதற்கு இந்த நடவடிக்கைகள் முக்கியமானவை.

தற்போதைய போக்கின்படி, அடுத்த ஓராண்டில் 10,000 முதல் 20,000 அகதிகள் வரை வேலைவாய்ப்புகளைப் பெறுவர் என்று ஐக்கிய நாடுகள் அமைப்பின் அதிகாரிகள் மதிப்பிடுகின்றனர்.

நிர்வாக நடைமுறைகள், வேலைகளுக்கான நடைமுறை அணுகல் ஆகியவை இந்த விரிவாக்கத்தின் வேகத்தின் மீது தாக்கத்தை ஏற்படுத்தும்.

குறிப்புச் சொற்கள்