கோலாலம்பூர்: மத்திய கிழக்குப் போரை முன்னிட்டு மலேசிய அரசாங்கம் பல்வேறு திட்டங்களை செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 7) அறிவித்துள்ளது. மே மாதம் வரைதான் எரிசக்தி இருப்பு உள்ளதாகவும் அரசாங்கம் எச்சரித்தது.
“ஏப்ரல், மே மாதங்களுக்குப் போதுமான எரிசக்தி விநியோகம் இருப்பதை அரசாங்கம் உறுதிசெய்துள்ளது. இப்போது ஜூன் மாதத்திலிருந்து அந்தத் தேவைகளை எப்படி பூர்த்திசெய்வது என்பதுதான் மிகப் பெரிய சவாலாக உள்ளது,” என்றார் பொருளியல் அமைச்சர் அக்மல் நசீர்.
எரிபொருள் பற்றாக்குறையால் பாதிக்கப்படும் நிறுவனங்களுக்கு மத்திய வங்கி ஆதரவு வழங்கும்.
அரசாங்கமும் அரசாங்க எண்ணெய் நிறுவனமான பெட்ரோனாசும் எரிசக்தியைப் பெற வெவ்வேறு தரப்புகளை நாடி வர்த்தகப் பங்காளி நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த முற்படும் என்றார் திரு அக்மல்.
போரால் எந்தெந்தத் துறைகள் அதிகமாகப் பாதிக்கப்பட்டுள்ளன என்பதைக் கண்டறிந்து உதவவும் அரசாங்கத் தரவுகளைப் பயன்படுத்தவிருக்கிறது என்றார் அவர்.
முக்கிய மருந்துகள், மருத்துவக் கருவிகள் ஆகியவற்றின் பற்றாக்குறைகளைப் பூர்த்திசெய்ய சிறப்புப் பாதைகள் அமைக்கப்படும்.
இதற்குமுன் 13,000க்கும் அதிகமான நிறுவனங்களைப் பிரதிநிதிக்கும் மலேசிய உற்பத்தியாளர்களின் சம்மேளனம், மூலப் பொருள்களின் பற்றாக்குறைகள், அதிகரிக்கும் தளவாடச் செலவினங்கள், குறைந்துவரும் டீசல் விநியோகம் ஆகியவை உணவு, வீட்டுப் பொருள்கள், ரசாயனங்கள் ஆகிய துறைகளின் உற்பத்தியைப் பாதிப்பதாகக் குறிப்பிட்டது.
தொழிற்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் மூன்றில் இரண்டு பங்கு நிறுவனங்கள் அடுத்த ஒரு மாதத்துக்குள் மூலப் பொருள்களுக்கான பற்றாக்குறையை எதிர்கொள்ளவிருப்பதாகத் தெரிவித்தன.
தொடர்புடைய செய்திகள்
கிட்டத்தட்ட 8 விழுக்காட்டு நிறுவனங்கள், தன்னிடம் உள்ள முக்கியப் பொருள்களின் இருப்பு இரண்டு வாரத்துக்கு மேல் நீடிக்காது என்று குறிப்பிட்டன.
தற்போதுள்ள நெருக்கடியைச் சமாளிக்க கிட்டத்தட்ட பாதி நிறுவனங்கள் உற்பத்தியைக் குறைத்துக்கொண்டன அல்லது உற்பத்தியைத் தற்காலிகமாக நிறுத்தியுள்ளன.
ஏறக்குறைய 51.8 விழுக்காட்டு நிறுவனங்கள் இறக்குமதியில் தாமதத்தை எதிர்கொண்டுள்ளன.

