பெட்டாலிங் ஜெயா: குழந்தைகளிடையிலும் பதின்ம வயதினரிடையிலும் பிரபலமடைந்து வரும் புத்துணர்ச்சி இன்ஹேலர்கள், மின் சிகரெட்டுகளில் உள்ள பொருள்களைக் கொண்டிருக்கலாம் என்று மலேசிய நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
மூக்கு வழி பயன்படுத்தப்படும் இந்த இன்ஹேலர்கள் உடல் ஆரோக்கியத்திற்குக் கேடு விளைவிக்கக்கூடும் என்று கூறிய அவர்கள் அவற்றுக்கு அடிமையாகும் சாத்தியமும் இருப்பதாகத் தெரிவித்தனர்.
அவற்றில் உள்ள பொருள்கள் நேரடியாக சுவாசமண்டலத்திற்குள் செல்வதாக மலேசிய மருந்தாளுநர் மன்றத்தின் தலைவர் அம்ராஹி புவாங் கூறினார்.
இந்த புத்துணர்ச்சி இன்ஹேலர்கள் குழந்தைகளிடையிலும், பதின்ம வயதினரிடையிலும் மின் சிகரெட் அல்லது புகைப்பிடிக்கும் பழக்கத்திற்கு இட்டுசெல்லக்கூடும் என்றும் அவர் சொன்னார்.
மருந்துக் கடைகளில் மருத்துவக் காரணங்களுக்காக விற்கப்படும் இன்ஹேலர்கள், இணையத்தில் விற்கப்படும் இத்தகைய புத்துணர்ச்சி இன்ஹேலர்களிலிருந்து மாறுபட்டவை என்று திரு அம்ராஹி கூறினார்.
மருந்துக் கடைகளில் விற்கப்படும் இன்ஹேலர்கள் தேசிய மருந்துத் தயாரிப்பு கட்டுப்பாட்டு அமைப்பில் பதிவு செய்யப்பட்டவை என்றும் புத்துணர்ச்சி இன்ஹேலர்கள் பதிவுசெய்யப்படாதவை என்றும் அவர் தெரிவித்தார்.
அத்தகைய பொருள்கள் தொடர்பான விளம்பரங்களை நீக்குமாறு திரு அம்ராஹி மின்வர்த்தகத் தளங்களைக் கேட்டுக்கொண்டார். குறிப்பாக குழந்தைகளை இலக்காகக் கொண்டு சமூக ஊடகத் தளங்களில் போடப்படும் விளம்பரங்களைக் கண்காணிக்குமாறும் அவர் மலேசிய தொடர்பு, பல்லூடக ஆணையத்தைக் கேட்டுக்கொண்டார்.
ஒட்டுமொத்த சமுதாய, அரசாங்க அணுகுமுறை தேவைப்படுவதாகக் கூறிய திரு அம்ராஹி, இந்த விவகாரத்தைச் சமாளிக்க சுகாதார அமைச்சும், கல்வி அமைச்சும் ஒன்றிணைந்து செயல்படுவதையும் சுட்டினார்.