எரிசக்தி விநியோகம் நிலையாக உள்ளது: மலேசியப் பிரதமர் அன்வார்

எரிசக்தி விநியோகம் நிலையாக உள்ளது: மலேசியப் பிரதமர் அன்வார்

2 mins read
bd5de5f5-634d-4cd8-a56f-5ff2d2683971
அன்வார் இப்ராகிம். - படம்: ஏஎஃப்பி

கோலாலம்பூர்: மலேசியாவின் எரிசக்தி விநியோகம் தொடர்ந்து நிலையாக இருப்பதாக அந்நாட்டுப் பிரதமர் அன்வார் இப்ராகிம் கூறியுள்ளார்.

மத்திய கிழக்குப் பூசலால் அனைத்துலக அளவில் நிச்சயமற்ற சூழல் நிலவும் வேளையில் மலேசியாவில் போதுமான எரிபொருள் இருப்பதாகத் திரு அன்வார் வெள்ளிக்கிழமை (மே 22) தெரிவித்தார்.

முன்னதாக, நாட்டின் எரிசக்தி விநியோகத்தை டிசம்பர்வரை நீட்டிப்பதற்கான வழிகளை மலேசிய அரசாங்கம் ஆராய்வதாகத் துணைப் பிரதமர் ஃபடில்லா யூசோஃப் கூறியிருந்தார்.

எரிசக்தி, நீர் உருமாற்றத் துறை அமைச்சரான திரு ஃபடில்லா, நாட்டின் எரிபொருள் விநியோகம் ஜூலை வரை நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாகச் சொன்னார்.

வெளிநாடுகளிலிருந்து கூடுதல் வளங்களைத் தருவித்து எரிபொருள் வளத்தைக் கூடுதல் மாதங்களுக்கு நீட்டிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாகவும் திரு ஃபடில்லா சுட்டினார்.

பெட்ரோனாஸ் நிறுவனமும் எரிபொருள் விநியோகத்தை உறுதிசெய்ய முயல்வதாகக் கூறிய அவர், ஆப்பிரிக்கா போன்ற நாடுகளை அது நாடியிருப்பதாகக் குறிப்பிட்டார்.

இவ்வாண்டின் மூன்றாம் காலாண்டில் அனைத்துலக விநியோக நெருக்கடியின் தாக்கம் இன்னும் அதிகமாகலாம் என்று மலேசியப் பொருளியல் அமைச்சர் அக்மல் நஸ்ருல்லா நசிர் மே 19ஆம் தேதி கூறினார்.

அனைத்துலக எரிசக்தி நிலவரம் தொடர்ந்து நிலையாக இருக்கிறது என்ற அவர், எரிவாயு விலைகள் சற்று உயர்ந்ததாகச் சொன்னார்.

திரவ இயற்கை எரிவாயுவின் சராசரி விலை 1.7 விழுக்காடு அதிகரித்தது. $17.41 அமெரிக்க டாலருக்கு விற்கப்பட்ட ஒரு பீப்பாய் எண்ணெய் விலை இப்போது $17.71 டாலராக உயர்ந்தது.

“அது, அனைத்துலக எரிவாயுச் சந்தை நிலவரம் தொடர்ந்து நிலையாக இருப்பதைக் காட்டுகிறது. உலகில் உள்ள முக்கிய சந்தைகளில் போதுமான விநியோகம் இருக்கிறது,” என்று திரு அக்மால் சொன்னார்.

எரிசக்தித் துறையில் நிலக்கரியின் விலை இதுவரை இல்லாத அளவில் 1.3 விழுக்காடு சரிந்தது.

ஒரு மெட்ரிக் டன் நிலக்கரியின் விலை இதற்குமுன் $133.19 அமெரிக்க டாலராக இருந்தது. தற்போது அது $131.50 அமெரிக்க டாலருக்குக் குறைந்தது.

குறிப்புச் சொற்கள்