இங்கிலாந்து: இங்கிலாந்தின் பிரிமியர் லீக் காற்பந்துப் போட்டியில் 2025, 2026ஆம் பருவத்துக்கான வெற்றியாளராக ஆர்சனல் குழு வாகை சூடியுள்ளது.
ஆர்சனல் குழு, 22 ஆண்டுகளுக்குப் பிறகு அந்தப் பட்டத்தை வென்று உலகெங்கும் உள்ள அக்குழுவின் ஆதரவாளர்களைப் பரவசத்தில் ஆழ்த்தியது.
இருப்பினும் அக்குழு நேற்று எந்த ஆட்டத்திலும் விளையாடவில்லை.
மாறாகக் குழுக்கள் பட்டியலில் இரண்டாம் நிலையில் ஐந்து புள்ளிகள் பின்தங்கி இருந்த மான்சஸ்டர் சிட்டி குழு, பர்னிமத் குழுவை வெல்லவேண்டிய ஆட்டத்தில் செவ்வாய்க்கிழமை (மே 19) 1-1 என்ற கோல் எண்ணிக்கையில் சமநிலை மட்டுமே அடைந்ததால், ஆர்சனலை எட்டிப்பிடிக்க முடியாத நிலை ஏற்பட்டது.
மொத்தம் உள்ள 38 ஆட்டங்களில் இன்னும் ஒரே ஆட்டம் மிஞ்சி உள்ளது. முதலிடத்தில் ஆர்சனல் குழு 82 புள்ளிகளுடனும் இரண்டாம் நிலையில் மான்சஸ்டர் சிட்டி குழு 78 புள்ளிகளுடனும் இருக்கின்றன.

