கோலாலம்பூர்: கோலாலம்பூரில் உள்ள மஸ்ஜித் இந்தியா பகுதியை நன்றாக ஆய்வு செய்து அதன் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும் என்று அப்பகுதியின் வர்த்தகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆகஸ்ட் 23ஆம் தேதியன்று யாரும் எதிர்பாரா வகையில் மஸ்ஜித் இந்தியாவில் உள்ள பாதசாரி நடைபாதையில் திடீரென்று ஆழ்குழி ஏற்பட்டது. அதில் இந்தியாவைச் சேர்ந்த சுற்றுப்பயணி ஒருவர் சிக்கிக்கொண்டார். தேடுதல் பணிகள் இன்னும் தொடர்கின்றன.
இந்நிலையில், அவ்வட்டாரத்தில் கடந்த சில தினங்களாக சரியான வியாபாரம் இல்லை என்றும் வர்த்தகர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
“ஆபத்து இருப்பதை அறிந்தும் கடை நடத்தி வருகிறோம். கடை திறக்காவிட்டால் அது இதைவிட ஆபத்து. கடைகளில் உள்ளவர்களுக்கு ஊதியம் தர வேண்டும், அதனால் வேறு வழியில்லை,” என்று ‘மலாய் மெயில்’ செய்தித்தாளிடம் ஆடைகள் விற்கும் கடை நடத்தும் யானா நசிர் தெரிவித்தார்.
மேலும் கோலாலம்பூர் அதிகாரிகள் கடைகளைச் சுற்றியுள்ள இடங்களையும் நிலத்தையும் சோதிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
அண்மையில் தரை சரிவு பிரச்சினைகள் காரணமாக இப்பகுதி ஒரு மாதித்திற்கு மேலாக மூடப்பட்டு இருந்தது. தற்போது மீண்டும் புதிய பிரச்சினை எழுந்துள்ளது என்று யானா நசிர் கூறினார்.
ஆழ்குழி ஏற்பட்டதால் இப்பகுதியை மக்கள் தவிர்க்கத் தொடங்கியுள்ளனர். அதனால் கடைத்தெரு வெறிச்சோடியுள்ளதாக 58 வயது மகாதேவன் தங்கம்மாள் தெரிவித்தார்.
சேலைக் கடை நடத்தும் தங்கம்மாள் சனிக்கிழமையன்று ஐந்து வாடிக்கையாளர்கள் மட்டும் தனது கடைக்கு வந்ததாகக் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
தங்கம்மாள் போலவே கலாதேவியும் வருத்தம் தெரிவித்தார். சுற்றுப்பயணிகள் அதிகம் வரும் இந்த இடம் தற்போது தவிர்க்கப்படும் இடமாக மாறியுள்ளது. போதுமான அளவில் வியாபாரம் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.
எதிர்காலத்தையும் பாதுகாப்பையும் நினைத்து பெரும் கவலை எழுந்துள்ளதாக அவ்வட்டார வியாபாரிகள் கண்ணீர் வடித்தனர்.