பத்து கஜா: இவ்வாண்டில் 500,000 வெளிநாட்டு ஊழியர்கள் மலேசியாவிற்கு வருவர் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அவர்களால் மலேசியர்களின் வேலைவாய்ப்புகள் பாதிக்கப்படாது என்று அந்நாட்டின் மனிதவள அமைச்சர் வி.சிவகுமார் தெரிவித்து இருக்கிறார்.
பதினைந்து ஆசிய நாடுகளில் இருந்து அந்த ஊழியர்கள் வரவழைக்கப்படுவர் என்றும் உள்ளூர்வாசிகள் ஆர்வம் காட்டாத தோட்டத்தொழில், வேளாண்மை, கட்டுமானம் உள்ளிட்ட துறைகளில் அவர்கள் பணியமர்த்தப்படுவர் என்றும் திரு சிவகுமார் கூறியதாக பெர்னாமா செய்தி தெரிவிக்கிறது.
"இத்துறைகளில் வேலை பார்க்க உள்ளூர் தொழிலாளர்கள் கிடைப்பது மிகவும் கடினமாக உள்ளது. அதனால், அத்துறைகள் வெளிநாட்டு ஊழியர்களை அதிகம் சார்ந்திருக்க வேண்டியுள்ளது. அத்துறைகளுக்குப் போதுமான ஊழியர்களை வழங்க முடியாவிடில், அவற்றின் செயல்பாடு குறைந்து, பேரளவில் இழப்பு ஏற்படலாம்," என்றார் அமைச்சர்.
பூசிங்கில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு நடந்த கூண்டுவிளக்கு ஒளியூட்டு விழாவில் பங்கேற்றபோது, பத்து கஜா தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரான திரு சிவகுமார் இவ்வாறு தெரிவித்தார்.
கொவிட்-19 பெருந்தொற்று காரணமாக 700,000 வெளிநாட்டு ஊழியர்கள் அவர்களுடைய சொந்த நாட்டிற்குத் திரும்பிவிட்டதாக அவர் குறிப்பிட்டார்.
அதனால், ஊழியர் பற்றாக்குறைப் பிரச்சினையை உடனடியாகத் தீர்க்க வேண்டும் என்றும் இல்லாவிடில் அது பொருளியலில் பாதிப்பை ஏற்படுத்திவிடும் என்றும் அவர் சொன்னார்.
இந்நிலையில், வெளிநாட்டு ஊழியர்களை விரைந்து வேலைக்கு எடுக்க ஏதுவாக, அதற்கான நடைமுறையை எளிதாக்குவது தொடர்பில் மனிதவள அமைச்சும் சட்ட அமைச்சும் ஓர் உடன்பாட்டை எட்டிவிட்டன என்று திரு சிவகுமார் தெரிவித்தார்.
முன்னதாக, கொவிட்-19 பெருந்தொற்றைத் தொடர்ந்து, நாட்டின் பொருளியல் மீட்சிக்கு உதவும் வகையில், குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் எதிர்கொள்ளும் ஊழியர் பற்றாக்குறையைப் போக்க மலேசியாவிற்கு 500,000 வெளிநாட்டு ஊழியர்கள் தேவைப்படுகின்றனர் என்று தேசிய மீட்சி மன்ற உறுப்பினர் மைக்கல் காங் கடந்த அக்டோபரில் தெரிவித்திருந்தார்.

