கோலாலம்பூர்: மலேசியாவில் 40,000 ஹெக்டருக்கும் அதிகமான பரப்பளவில் உள்ள சதுப்புநிலக் காடுகள், 2017ஆம் ஆண்டுக்குப் பிறகு மறைந்துவிட்டதாக அந்நாட்டு இயற்கை வள, சுற்றுப்புற நீடித்த நிலைத்தன்மை அமைச்சு தெரிவித்துள்ளது.
நாட்டில் தற்போது 586,548 ஹெக்டர் பரப்பளவில்தான் சதுப்புநிலக் காடுகள் உள்ளதாக அமைச்சு குறிப்பிட்டது. 2017ஆம் ஆண்டில் 629,038 ஹெக்டர் பரப்பளவிலான சதுப்புநில வனப் பகுதியை மலேசியா கொண்டிருந்தது. தற்போது அது 3.26 விழுக்காடு குறைந்துவிட்டது.
கடந்த எட்டு ஆண்டுகளில் ஏறக்குறைய 42,500 ஹெக்டர் பரப்பளவில் உள்ள சதுப்புநிலக் காடுகள் அழிந்ததற்கு இயற்கை காரணங்களும் மனிதனால் உண்டான காரணங்களும் அடங்கும் என்று இயற்கை வள, சுற்றுப்புற நீடித்த நிலைத்தன்மை அமைச்சு கூறியது.
கரையோரங்களில் ஏற்படும் மண்ணரிப்பு, உள்கட்டமைப்பு மேம்பாடுகளுக்காக மாற்றப்படும் கரையோரப் பகுதிகள், மீன்வளர்ப்பு நடவடிக்கைகள், வேளாண் நடவடிக்கைகள் ஆகிய காரணங்களை அமைச்சு திங்கட்கிழமை (ஜனவரி 26) நாடாளுமன்றத்துக்கு அளித்த எழுத்துபூர்வப் பதிலில் குறிப்பிட்டது.
இத்தகைய நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்த தேசிய சதுப்புநில, கரையோர மரம் நடும் திட்டத்தை அமல்படுத்தியிருப்பதாக அமைச்சு சொன்னது. அதன்மூலம் சதுப்புநிலப் பகுதிகளை மீட்க முடியும் என்று அமைச்சு நம்பிக்கை தெரிவித்தது.
இன்றைய நிலவரப்படி 3,800 ஹெக்டருக்கும் அதிகமான கரையோரப் பகுதிகள் வெற்றிகரமாக மீட்கப்பட்டுள்ளன என்ற அமைச்சு, அங்கு ஒன்பது மில்லியனுக்கும் அதிகமான மரங்கள் நடப்பட்டிருப்பதைச் சுட்டியது.
மேலும், நிரந்தர வனப்பகுதிகளாக அரசிதழில் பதிவுசெய்யப்பட்ட சதுப்புநிலப் பகுதிகளில் மேம்பாட்டு நடவடிக்கைகளைத் தடைசெய்யும் கடுமையான கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை வனத்துறை மூலம் அமைச்சு அமல்படுத்தியுள்ளது.
பொதுமக்களுக்குத் தேவைப்படும் அவசர மேம்பாடுகளுக்கு மட்டும் அனுமதி வழங்கப்படும் என்றும் சுற்றுப்புறப் பாதிப்புகள் குறித்து மதிப்பிடப்பட்ட பிறகே மேம்பாட்டுப் பணிகள் அனுமதிக்கப்படும் என்றும் அமைச்சு திட்டவட்டமாகக் கூறியது.


