கோலாலம்பூர்: மலேசியாவில் பணிபுரியும் வெளிநாட்டு ஊழியர்கள், ஊழியர் சேமநிதிக் கணக்கிற்குக் கட்டாயம் பங்களிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் புதிய விதிமுறை இவ்வாண்டின் இறுதிக் காலாண்டிலிருந்து நடப்புக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுவதாக மலேசியாவின் நிதி இரண்டாம் அமைச்சர் அமீர் அம்சா அசிசான் தெரிவித்தார்.
ஊழியர் சேமநிதி திருத்த மசோதா 2025ன்படி, வெளிநாட்டு ஊழியர்களின் மாதச் சம்பளத்திலிருந்து 2 விழுக்காட்டுத் தொகையை ஊழியர்களும் அவர்களது முதலாளிகளும் ஊழியர்களின் ஓய்வுக்கால நிதிக்குப் பங்களிக்க வேண்டும்.
இந்தத் திருத்த மசோதா வியாழக்கிழமை (மார்ச் 6) மலேசிய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
வெளிநாட்டு ஊழியர்கள் தங்கள் சொந்த நாடுகளுக்குத் திரும்பும்போது அல்லது 55 வயதை எட்டும்போது அத்தொகையை திரும்பப் பெற்றுக்கொள்ளலாம் என்று அமைச்சர் அமீர் தெரிவித்தார்.
“வெளிநாட்டு ஊழியர்களின் வேலை அனுமதி அட்டை காலாவதி ஆகிவிட்ட நிலையில், அல்லது நிரந்தரப் பணி நியமனம் முடிவுக்கு வந்துவிட்டதற்கான ஆதாரம் இருந்தால் ஊழியர் சேமநிதிக் கணக்கில் ஒதுக்கப்பட்ட தொகை அவர்களிடம் திருப்பித் தரப்படும்,” என்றார் அமைச்சர் அமீர் குறிப்பிட்டார்.
வெளிநாட்டு ஊழியர்களிடமிருந்து ஊழியர் சேமநிதிக்கான தொகையைப் பெற அரசாங்க அமைப்புகளுடன் இணைந்து ஊழியர் சேமநிதிக் கழகம் பதிவு அணுகுமுறையை உருவாக்கி வருவதாக அவர் கூறினார்.

