தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பத்துமலை முருகன் கோவிலில் மின்படிகள்

2 mins read
f514cc68-27e3-4e8b-8dc4-37a1118cd133
பத்துமலை முருகன் கோவில். - படம்: ஊடகம்

கோம்பாக்: புகழ்பெற்ற பத்துமலை முருகன் கோவிலில் இவ்வாண்டில் மின்படி வசதி அமைக்கப்படவுள்ளது.

இதன்மூலம், பக்தர்கள் 272 படிகளில் ஏறிச் செல்வதற்குப் பதிலாக, மின்படிகளில் எளிதாக மேலேறிச் சென்று, இறைவனை வழிபடலாம்.

இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த மலேசிய அரசாங்கம், கோவிலுக்கு நிதி வழங்கும் என்று நம்புவதாக கோவில் நிர்வாகக் குழுவின் தலைவர் ஆர் நடராஜா கூறினார்.

“படியேறிச் செல்ல முடியாத உடற்குறையுள்ளோருக்கும் முதியோருக்கும் உதவும் வகையில், இவ்வாண்டு மின்படிகளை அமைக்கவுள்ளோம். அதற்கு, அரசாங்கம் எங்களுக்குக் கைகொடுக்கும் என நம்புகிறோம்,” என்று செய்தியாளர்களிடம் திரு நடராஜா சொன்னார்.

செய்தியாளர் சந்திப்பின்போது, மலேசிய மனிதவள அமைச்சர் ஸ்டீவன் சிம்மும் உடனிருந்தார்.

மின்படிகள் அமைக்கும் திட்டத்திற்கு எவ்வளவு செலவாகும் என்று திரு நடராஜா குறிப்பிடவில்லை.

ஆயினும், கோவிலின் பராமரிப்புப் பணிகளுக்காக ஒரு மில்லியன் ரிங்கிட் ஒதுக்கியதற்காக கடந்த ஆட்சியில் மனிதவள அமைச்சராக இருந்தவரும் பத்து காஜா தொகுதி எம்.பி.யுமான திரு வி. சிவகுமாருக்கு அவர் நன்றி தெரிவித்துக்கொண்டார்.

பத்துமலையிலுள்ள முருகன் கோவிலுக்கு 272 படிகள் ஏறிச் செல்ல வேண்டும்.
பத்துமலையிலுள்ள முருகன் கோவிலுக்கு 272 படிகள் ஏறிச் செல்ல வேண்டும். - படம்: தி ஸ்டார்

மேலும், தைப்பூசத் திருநாளுக்குப் பிறகு கோவிலில் புதிய பன்னோக்கு மண்டபத்திற்கான கட்டுமானப் பணிகள் தொடங்கும் என்றும் திரு நடராஜா குறிப்பிட்டார்.

அதற்கு 35 மில்லியன் ரிங்கிட் செலவாகும் என எதிர்பார்க்கப்படுவதாக ‘ஃபிரீ மலேசியா டுடே’ செய்தி தெரிவித்தது.

இம்மாதம் 25ஆம் தேதி தைப்பூசத் திருநாள் கொண்டாடப்படுகிறது.

“தைப்பூசத் திருநாளுக்குப் பிறகு இவ்விரு திட்டங்களையும் தொடங்கவுள்ளோம். அதற்கு அரசாங்கத்தின் உதவி தேவைப்படுகிறது,” என்று திரு நடராஜா வேண்டுகோள் விடுத்தார்.

இதனிடையே, தைப்பூசத் திருநாளின்போது தளவாடப் பணிகள் தொடர்பில் கோவில் நிர்வாகத்திற்கு உதவுவதற்காக மனிதவள அமைச்சு 200 தொண்டூழியர்களை அனுப்பும் என்று அமைச்சர் சிம் தெரிவித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்