புதுடெல்லி: தன்னையும் தன் சகோதரியையும் கொலை செய்ய முயற்சி மேற்கொள்ளப்பட்டதாகக் கூறி, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் பங்ளாதேஷ் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசினா.
கடந்த ஆண்டு பங்ளாதேஷில் மாணவர் தலைமையில் வெடித்த பெரும்புரட்சியை அடுத்து, ஹசினா தலைமையிலான ஆட்சி கவிழ்ந்தது. அதனையடுத்து, அவர் இந்தியாவிற்குத் தப்பியோடினார்.
இந்நிலையில், “20-25 நிமிட இடைவெளியில் நானும் என் சகோதரி ஷேக் ரேஹானாவும் சாவிலிருந்து தப்பினோம்,” என்று அவாமி லீக் கட்சியின் ஃபேஸ்புக் பக்கம் வழியாக ஓர் ஒலிப்பதிவு மூலம் 76 வயதான ஹசினா தெரிவித்துள்ளார்.
மேலும், தம்மை ஆட்சியிலிருந்து அகற்ற எதிரிகள் ஒருங்கிணைந்து செயல்பட்டதாகவும் பல்வேறு முறை தம்மைக் கொல்ல முயன்றும் இறையருளால் உயிர்தப்பியதாகவும் அவர் கூறியுள்ளார்.
“2000ஆவது ஆண்டில் கோத்தலிப்பாரா வெடிகுண்டுத் தாக்குதல், 2004 ஆகஸ்ட் 21 கையெறிகுண்டுத் தாக்குதல், 2024 ஆகஸ்ட் 25 மிரட்டல் - இத்தனை முறையும் இறைவன் அருளால் நான் தப்பினேன். இல்லையெனில், இன்று நான் உயிரோடு இருக்கமாட்டேன்,” என்று அவர் குறிப்பிட்டார்.
மேலும், தம்முடைய நாடும் வீடும் இல்லாமல் இருப்பதாகவும் எல்லாமே எரிக்கப்பட்டுவிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, ஹசினாவின் ஆட்சிக் காலத்தில் நூற்றுக்கணக்கானோர் மாயமானதைத் தொடர்ந்து அவரைக் கைதுசெய்ய பங்ளாதேஷின் அனைத்துலகக் குற்றத் தீர்ப்பாயம் ஆணை பிறப்பித்தது குறிப்பிடத்தக்கது.
மேலும், போராட்டம் தொடர்பான குற்றச் செயல்களில் தொடர்பிருப்பதாகக் கூறி, ஹசினா உள்ளிட்ட 97 பேரின் கடப்பிதழ்களை பங்ளாதேஷ் அரசாங்கம் ரத்துசெய்தது. அவரை நாடுகடத்துவது தொடர்பிலும் இந்திய அரசுக்கு முறையான கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
பங்ளாதேஷில் 2024ஆம் ஆண்டு வெடித்த போராட்டங்களிலும் மோதல்களிலும் 600க்கும் மேற்பட்டோரின் உயிர் பறிபோனது.