சோல்: தென்கொரியாவின் டேஜோன் வட்டாரத்தில் உள்ள விலங்குத் தோட்டத்திலிருந்து ஓநாய் ஒன்று புதன்கிழமை (ஏப்ரல் 8) தப்பிச்சென்றது.
ஓநாய் பிடிபடாத காரணத்தால் பாதுகாப்பு கருதி டேஜோன் வட்டாரத்தில் உள்ள பள்ளி மூடப்பட்டது. ஓநாயைத் தேடும் பணிகளும் தீவிரமாக நடந்து வருகின்றன.
விலங்கியல் தோட்டத்திலிருந்து தப்பிச் சென்ற ஓநாய் 2024ஆம் ஆண்டு பிறந்ததாகவும் அதன் உடல் எடை கிட்டத்தட்ட 30 கிலோ என்றும் தெரிவிக்கப்பட்டது.
ஓநாய் குழியைத் தோண்டி, விலங்குத் தோட்டத்தின் வேலியைச் சேதப்படுத்தித் தப்பிச் சென்றது. சாலையின் நடுவில் அது நடந்து செல்லும் படம் ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது.
தலைநகர் சோலுக்குக் தெற்கே 150 கிலோமீட்டர் தொலைவில் அந்த விலங்கியல் தோட்டம் அமைந்துள்ளது.
“தேடுதல் வேட்டை தொடர்கிறது. விலங்கியல் தோட்டத்திற்கு அருகில் உள்ள பள்ளி பாதுகாப்பு காரணங்களுக்காக மூடப்பட்டுள்ளது,” என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
தேடுதல் பணியில் தீயணைப்பு வீரர்கள், காவல்துறை அதிகாரிகள், ராணுவ வீரர்கள் என 300க்கும் மேற்பட்டோர் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
“ஓநாயைப் பிடிக்க காலை நேரத்தில் வானூர்தியைப் பயன்படுத்தினோம். ஆனால், மழை பெய்த காரணத்தால் வானூர்தியைத் தொடர்ந்து பயன்படுத்த முடியவில்லை,” என்று அதிகாரிகள் செய்தியாளர்களிடம் தெரிவித்தனர்.

