அட்டிஸ் அபாபா: எத்தியோப்பியாவில் பயணிகள் நிறைந்த லாரி ஒன்று ஆற்றில் கவிழ்ந்ததில் கிட்டத்தட்ட 71 பேர் மாண்டதாக சிடாமா வட்டார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
போனா மாவட்டத்தில் அந்த விபத்து நடந்ததாக வட்டாரத் தொடர்பு அமைப்பு ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 30) பின்னேரம் தெரிவித்தது.
விபத்தில் உயிர்பிழைத்தவர்களுக்கு போனா பொது மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுவதாக அது குறிப்பிட்டது. மேல்விவரங்கள் வெளியிடப்படவில்லை.
அந்த லாரியில் பயணம் செய்தவர்கள் திருமண நிகழ்ச்சியில் கலந்துகொள்ளச் சென்றதாக எத்தியோப்பியாவின் அரசாங்க ஒலிபரப்புக் கழகம் (EBC) கூறியது.
எத்தியோப்பியாவில் வாகனம் ஓட்டுவோர்க்கான தரநிலைகள் மோசமாக இருப்பதுடன் வாகனங்கள் சரியாகப் பராமரிக்கப்படாததால் போக்குவரத்து விபத்துகள் அதிகம் பதிவாகிவருகின்றன.
முன்னதாக 2018ஆம் ஆண்டு, நாட்டின் வடக்குப் பகுதியிலுள்ள மலைப்பகுதியில் சென்ற பேருந்து பள்ளத்தாக்கில் விழுந்ததில் ஏறக்குறைய 38 பேர் மாண்டனர். அவர்களில் பெரும்பாலானோர் மாணவர்கள்.