இலங்கையில் சிங்கள-பெளத்தமயம் தொடர்பில் நீடிக்கும் இனப்பதற்றம்

இலங்கையில் சிங்கள-பெளத்தமயம் தொடர்பில் நீடிக்கும் இனப்பதற்றம்

2 mins read
1e8e14f7-58be-4527-b84f-b035a09ff789
நீராவியடி பிள்ளையார் கோவில் அருகே எழுப்பப்பட்ட புத்தர் சிலை. - படம்: ஊடகம்

முல்லைத்தீவு: இலங்கையில் தமிழர்கள் பெரும்பான்மையினராக இருக்கும் வடக்கு மாநிலத்தின் முல்லைத்தீவு மாவட்டத்தில் புத்தர் சிலை ஒன்று நிறுவப்பட்டு உள்ளது.

பழை செம்மலையை நோக்கிய பாதையில், புத்தர் சிலை அமைந்துள்ள இடத்தை பழங்கால பௌத்த தலமாக இலங்கையின் அகழ்வாராய்ச்சித் துறை அங்கீரித்து உள்ளது.

அதன் அருகில் சிறிய, நீராவியடி பிள்ளையார் கோவில் உள்ளது. அந்தக் கோவிலில் தாங்கள் காலம் காலமாக வழிபட்டு வருவதாக தமிழர்கள் தெரிவித்து உள்ளனர்.

அண்மைய ஆண்டுகளாக அந்தப் பகுதி அடையாளப் போட்டியை ஏற்படுத்தி வருவதாக அண்மையில் வெளியிடப்பட்ட, மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

இலங்கையின் நிலப் பூசல்களின் போக்குகள் என்னும் தலைப்பில் வெளியிடப்பட்ட அந்த அறிக்கை, வடக்கு மற்றும் கிழக்கு மாநிலங்கள் சிங்கள-பௌத்தமயமாக்கல் அதிகரித்து வருவதை உணர்த்துவதாகத் தெரிவித்து உள்ளது.

ஈழப் போர் முடிவடைந்து செம்மலையில் வாழ்ந்த மக்கள் இடம்பெயர்ந்துவிட்ட சூழலில் அந்த இடத்தின் அடையாளம் மாறிவிட்டது என நீராவியடி பிள்ளையார் கோவில் செயலாளரும் செம்மலை குடியிருப்பாளருமான ராஜா சின்னத்தம்பி கூறியதாக ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ தெரிவித்து உள்ளது.

அகழ்வாராய்ச்சித் துறையின் ஆதரவோடு மக்கள்தொகையிலும் கலாசார அடையாளத்திலும் செய்யப்படும் மாற்றங்கள் இனப் பதற்றத்துக்கு முக்கிய காரணங்களாக உள்ளன.

குறிப்பாக, கிழக்கு மாநிலத்தில் பதற்றம் நீடிப்பதாக அந்த செய்தித்தாள் கூறியுள்ளது.

முல்லைத்தீவின் குருத்துமலையில் பன்னெடுங்காலமாக தமிழர்கள் வழிபட்டு வந்த ஆதி சிவன் அய்யனார் கோவில் பகுதியிலும் திரிகோணமலையின் கச்சவெளியிலும் புதிதாக பௌத்த ஆலயங்கள் எழுப்பப்படுவது, சிங்கள-பௌத்த மயமாக்கலின் சில உதாரணங்களாகக் குறிப்பிடப்படுகின்றன.

குறிப்புச் சொற்கள்