பிரசல்ஸ்: ஐரோப்பிய ஒன்றிய வட்டார நாடுகளைச் சேராதோருக்கான தானியக்கக் குடிநுழைவு முறை வரும் அக்டோபர் மாதம் முதல் நடப்புக்கு வரும்.
இதுவரை ஒத்திவைக்கப்பட்டிருந்த ஈஈஎஸ் (EES) எனும் அந்த முறை அக்டோபரில் நடப்புக்கு வரவிருப்பதை ஐரோப்பிய ஒன்றியம் புதன்கிழமை (ஜூலை 30) அறிவித்தது.
ஈஈஎஸ் முறையை சென்ற ஆண்டு நவம்பர் மாதம் செயல்படுத்தத் திட்டமிடப்பட்டிருந்தது. எனினும், பல நாடுகள் தயார்நிலையில் இல்லாததால் திட்டம் ஒத்திவைக்கப்பட்டது.
பயணிகள் ஐரோப்பிய நாடுகளுக்குள் நுழைந்து, வெளியேறும் தேதிகள் ஈஈஎஸ் முறையில் பதிவாகும். அனுமதிக்கப்பட்ட காலத்துக்கு மேல் தங்குவோர், நுழைய அனுமதி மறுக்கப்பட்டோர் ஆகியோரின் தகவல்களும் இருக்கும்.
பயணிகளின் தகவல்கள், அவர்களின் முக அடையாளங்கள், விரல் ரேகை ஆகியவையும் சேகரிக்கப்படும்.
ஈஈஎஸ் முறையின் காரணமாக ரயில்கள், கப்பல்கள், விமானங்களில் ஐரோப்பா செல்வோருக்குக் காத்திருப்பு நேரம் அதிகரிக்கலாம் என்ற அச்சம் நிலவியது. பின்னர் முறையைக் கட்டங்கட்டமாகச் செயல்படுத்த ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகள் கடந்த மார்ச் மாதம் ஒப்புக்கொண்டன.
ஈஈஎஸ் அக்டோபர் மாதம் 12ஆம் தேதி நடப்புக்கு வரத் தொடங்கும் என்று ஐரோப்பியக் குழுமம் புதன்கிழமை தெரிவித்தது.
அந்தத் தானியக்க முறை, அயர்லாந்து, சைப்ரஸ் ஆகிய இரண்டையும் தவிர 27 ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் ஈஈஎஸ் செயல்படுத்தப்படும்.
தொடர்புடைய செய்திகள்
ஈஈஎஸ் முறையைப் பயன்படுத்தவிருக்கும் நார்வே, ஐஸ்லாந்து, லியெக்டன்ஸ்டைன் ஆகியவை, ஐரோப்பிய ஒன்றியத்தில் இடம்பெறவில்லை. எனினும், ஷென்கன் வட்டாரத்தில் இடம்பெறுவதால் அவை, ஈஈஎஸ்ஸுக்கு விண்ணப்பிக்கும்.

