‘முடக்கப்பட்ட ரஷ்யச் சொத்துகளின் லாபம் உக்ரேன் ராணுவத்திற்கு அளிக்கப்படும்’

2 mins read
863729f4-a80f-4721-a41c-7195fd2dbd00
உக்ரேனில் ரஷ்யா மேற்கொண்ட தாக்குதலால் உருக்குலைந்த தனியார் வீடுகள். படம்: ஏஎஃப்பி - படம்: ஏஎஃப்பி

புரூஸல்ஸ்: ஐரோப்பிய ஒன்றியத்தால் முடக்கப்பட்ட ரஷ்ய நிதி நிறுவனங்களின் சொத்துகளில் இருந்து கிடைக்கப்பெறும் லாபத்தை உக்ரேனின் ராணுவத்திற்குப் பயன்படுத்துவதற்குப் பரிந்துரைக்கப்பட்ட திட்டத்தை ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் முறையாக ஏற்றுக்கொண்டுள்ளன. இதை பெல்ஜிய அரசாங்கம் மே 22ஆம் தேதி தெரிவித்துள்ளது.

இந்நிலையில், ரஷ்யாவின் மூத்த அரச தந்திரி ஒருவர், இதை வன்மையாகக் கண்டித்துள்ளார். இது கணிக்கமுடியாத அளவிலான எதிர்வினைகளை ஏற்படுத்துவது உறுதி. அப்போது, ஐரோப்பிய ஒன்றியம், ரஷ்யாவிடம் இருந்து கைப்பற்றிய அதன் சொத்துகளையெல்லாம் ஒப்படைக்க வேண்டிய கட்டாயத்திற்கு கூடியவிரைவில் அல்லது பின்னர் தள்ளப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்த ஒப்பந்தத்தின்படி முடக்கப்பட்ட ரஷ்ய நிதி நிறுவனச் சொத்துகளின் லாபத்தில் 90 விழுக்காட்டுத் தொகை, உக்ரேனின் ராணுவத்துக்கு அளிக்கப்படும். இது ரஷ்ய ஆக்கிரமிப்பை முறியடிக்க உக்ரேனுக்கு உதவும். எஞ்சிய 10 விழுக்காடு உக்ரேனுக்கு மற்ற வழிகளில் ஆதரவளிக்க பயன்படுத்தப்படும் என்று ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.

முடக்கப்பட்ட ரஷ்ய சொத்துகளில் இருந்து வரும் 2027ஆம் ஆண்டுக்குள் 15 முதல் 20 பில்லியன் யூரோஸ் (S$22 பில்லியன் முதல் S$29 பில்லியன் வரை) லாபம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒப்பந்தத்தின்படி உக்ரேன் வரும் ஜூலை மாதத்தில் முதல் தவணைத் தொகையைப் பெறும் என்று ஒன்றியத்தின் தூதர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த 2022ஆம் ஆண்டில் ரஷ்யா உக்ரேன் மீது படையெடுத்தது. அதையடுத்து ஜி7 நாடுகள், ரஷ்யாவின் U$300 பில்லியன் (S$404 பி.) மதிப்புள்ள நிதி சார்ந்த சொத்துகளை முடக்கி வைத்தது. அவ்வாறு முடக்கப்பட்ட சொத்துகளில் இருந்து கிடைக்கும் லாபத்தை உக்ரேனுக்கு எந்த வகையில் பயன்படுத்துவது என்பது குறித்து ஜி7 நாடுகளும் ஐரோப்பிய ஒன்றியமும் ஆலோசித்து வந்தன. இந்நிலையில், ரஷ்யாவிடம் இருந்து தன்னைத் தற்காக்க பயன்படும் வகையில் அந்தத் தொகையை உக்ரேனின் ராணுவத்திற்கு அளிக்க ஜி7 நாடுகளும் ஐரோப்பிய ஒன்றியமும் இணக்கம் கண்டுள்ளன.

இந்த முடிவை வரவேற்ற உக்ரேனின் வெளியுறவு அமைச்சர் டிமைட்ரோ குலேபா, ஐரோப்பிய ஒன்றியத்திற்கு நன்றி தெரிவித்துக்கொண்டார்.

இருப்பினும் முடக்கப்பட்ட அந்தச் சொத்துகளில் இருந்து லாபத்தை மட்டும் பெறுவது உக்ரேனின் இலக்கல்ல. “முடக்கப்பட்ட நிதி நிறுவனங்களின் சொத்துகள் அனைத்தையும் பறிமுதல் செய்யவேண்டும் என்பதே எங்களின் இலக்கு” என்று அவர் கூறியுள்ளார். “அதைத்தான் கடந்த கடந்த ஓராண்டாகக் கூறிக்கொண்டுள்ளோம்” என்றார் குலேபா.

இந்நிலையில், ரஷ்யாவின் சொத்துகளைக் கையாடினால் கடுமையான பின்விளைவுகளை எதிர்நோக்க நேரிடும் என்று மேற்கத்திய நாடுகளுக்கு ரஷ்யா எச்சரிக்கை விடுத்துள்ளது.

குறிப்புச் சொற்கள்