உக்ரேனியப் பாதுகாப்பை உறுதிசெய்வதற்காகும் செலவில் பெரும்பங்கை ஐரோப்பிய நாடுகள் ஏற்கவேண்டும் என்று அமெரிக்கத் துணையதிபர் ஜே டி வான்ஸ் கூறியிருக்கிறார்.
உக்ரேனில் ரஷ்யா தொடுத்துள்ள போர் மூன்றரை ஆண்டுகளாக நீடிக்கிறது. அதனை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் விரும்புகிறார்.
ரஷ்யப் படையெடுப்பைச் சமாளிக்கப் பாதுகாப்பு உத்தரவாதத்தைக் கோருகிறது உக்ரேன்.
அமெரிக்கத் படைகளை அங்கு அனுப்பமுடியாது என்று திரு டிரம்ப் கூறிவிட்டார். ஆனால் வான்வழியாக அமெரிக்கா ஆதரவு வழங்கும் என்றார் அவர்.
உக்ரேனின் பாதுகாப்பை உறுதிசெய்வதற்குப் படைகளை அனுப்பத் தயாராக இருக்கும் ஐரோப்பிய நாடுகள், கூட்டணியொன்றை உருவாக்கியுள்ளன.
இதுவரை உக்ரேனுக்கு அமெரிக்கா ராணுவ உதவியாக பில்லியன் கணக்கான டாலர் கொடுத்ததில் திரு டிரம்ப்புக்கு உடன்பாடில்லை. கியவின் தற்காப்புக்கு அமெரிக்கா இனியும் வெற்றுக் காசோலைகளில் கையெழுத்திட்டுக் கொடுக்காது என்று வெள்ளை மாளிகை தெரிவித்துவிட்டது.
செலவை ஏற்பதில் ஐரோப்பிய நட்பு நாடுகள் கூடுதல் பொறுப்பை ஏற்கவேண்டும் என்று திரு டிரம்ப் விரும்புகிறார்.
“அமெரிக்காதான் பாரத்தைச் சுமக்கவேண்டும் என்று நான் நினைக்கவில்லை. ஐரோப்பா முன்னின்று பொறுப்பை ஏற்கவேண்டும். அது அவர்களின் கண்டம், அவர்களின் பாதுகாப்பு. அதனால் ஐரோப்பா கூடுதல் பொறுப்பை எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதில் அதிபர் மிகவும் தெளிவாக இருக்கிறார்,” என்று ஃபோக்ஸ் (Fox) செய்தி ஊடகத்திடம் திரு வான்ஸ் தெரிவித்தார்.
தொடர்புடைய செய்திகள்
ரஷ்யா உக்ரேனின் சில பகுதிகளை எடுத்துக்கொள்ள விரும்புவதாகத் திரு வான்ஸ் கூறினார். அவற்றில் பெரும்பகுதியை ரஷ்யா ஏற்கெனவே ஆக்கிரமித்துவிட்டது என்றும் சிலவற்றை இன்னும் அதன்வசம் கொண்டுவரவில்லை என்றும் அவர் சொன்னார்.
உக்ரேன் அதன் எந்தப் பகுதியையும் விட்டுக்கொடுக்காது என்று அந்நாட்டு அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கி கூறிவருகிறார். ரஷ்யாவின் கைவசமுள்ள அனைத்துப் பகுதிகளையும் மீண்டும் கைப்பற்றும் அளவுக்கு உக்ரேனிடம் ராணுவ வசதிகள் இல்லை என்று கூறப்படுகிறது.

