பிரசல்ஸ்: ஈரான் போரின் விளைவாக எரிசக்தி சந்தைகளில் ஏற்படக்கூடிய நீடித்த இடையூறுகளுக்கு ஐரோப்பிய ஒன்றிய அரசாங்கங்கள் தயாராக இருக்க வேண்டும் என்று அந்தக் கூட்டமைப்பின் எரிசக்தி துறைத் தலைவர், செவ்வாய்க்கிழமையன்று (மார்ச் 31) நடைபெறவுள்ள அவசரக்கூட்டத்திற்கு முன்னதாக உறுப்பு நாடுகளின் அமைச்சர்களிடம் தெரிவித்துள்ளார்.
“நீடித்த இடையூறுகளை எதிர்பார்த்து அரசாங்கங்கள் சரியான நேரத்தில் தயாரிப்புகளைச் செய்ய ஊக்குவிக்கப்படுகின்றன,” என்று மார்ச் 30 தேதியிடப்பட்ட எரிசக்தி அமைச்சர்களுக்கான கடிதத்தில், ஐரோப்பிய ஒன்றிய எரிசக்தி ஆணையர் டேன் யோர்கென்சன் குறிப்பிட்டார்.
ஐரோப்பா இறக்குமதி செய்யப்படும் எரிபொருளைப் பெரிதும் நம்பியிருப்பதால், மத்திய கிழக்கு மோதலால் உலகளாவிய எரிசக்தி விலைகளில் ஏற்படும் பாதிப்புகளுக்கு அந்த கண்டம் ஆளாகும் நிலை உள்ளது. பிப்ரவரி 28ஆம் தேதியன்று ஈரானுக்கு எதிரான அமெரிக்க-இஸ்ரேல் போர் தொடங்கியதிலிருந்து ஐரோப்பாவின் எரிவாயு விலைகள் 70 விழுக்காட்டுக்கும் அதிகமாக உயர்ந்துள்ளன.
முக்கியக் கப்பல் போக்குவரத்துப் பாதையான ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டதால், ஐரோப்பிய ஒன்றியத்தின் கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு விநியோகம் நேரடியாகப் பாதிக்கப்படவில்லை. ஏனெனில், ஐரோப்பா இந்த எரிசக்தி ஆதாரங்களில் பெரும்பகுதியை மத்திய கிழக்கு நாடுகளுக்கு வெளியிலிருந்து இறக்குமதி செய்கிறது.
இருப்பினும், விமான எரிபொருள் மற்றும் டீசல் போன்ற சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலியப் பொருள்களின் விநியோகம் குறித்து ஐரோப்பிய ஒன்றியம் குறுகிய காலத்தில் குறிப்பாக கவலை கொண்டுள்ளதாக யோர்கென்சன் தெரிவித்தார்.
எரிபொருள் பயன்பாட்டை அதிகரிக்கும், பெட்ரோலியப் பொருள்களின் வர்த்தகத்தைக் கட்டுப்படுத்தும் அல்லது இந்தப் பொருள்களைக் கையாளும் ஐரோப்பியச் சுத்திகரிப்பு நிலையங்களின் உற்பத்தியை ஊக்கப்படுத்தும் எந்தவொரு நடவடிக்கையையும் அரசாங்கங்கள் தவிர்க்க வேண்டும் என்று கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
“உறுப்பு நாடுகள் அவசரமில்லாத சுத்திகரிப்பு நிலையப் பராமரிப்புப் பணிகளைத் தள்ளிவைக்குமாறு ஊக்குவிக்கப்படுகின்றன,” என்றும் அக்கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

