அமெரிக்க வணிக ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்த ஐரோப்பிய ஒன்றியம் ஒப்புதல்

டோனல்ட் டிரம்ப் மிரட்டலுக்குப் பணிந்தது

அமெரிக்க வணிக ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்த ஐரோப்பிய ஒன்றியம் ஒப்புதல்

2 mins read
2bfbaa2b-c3d9-4c13-8782-231d2fa404e5
ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (மே 19) நடந்த கூட்டம் நள்ளிரவைத் தாண்டியும் நீடித்தது. - கோப்புப்படம்: ராய்ட்டர்ஸ்

ஸ்ட்ராஸ்போர்க் (பிரான்ஸ்): அமெரிக்காவுடனான வணிக ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கு ஐரோப்பிய ஒன்றியம் ஒப்புக்கொண்டுள்ளது.

முன்னதாக, இவ்வாண்டு ஜூலை 4ஆம் தேதிக்குள் அதனை நடைமுறைப்படுத்தவில்லை எனில் புதிய வரிகள் விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் மிரட்டல் விடுத்திருந்தார்.

மொத்தம் 27 உறுப்பு நாடுகளைக் கொண்ட ஐரோப்பிய ஒன்றியம் கடந்த 2025 ஜூலையில் அமெரிக்காவுடன் ஓர் ஒப்பந்தம் செய்துகொண்டது. அதன்படி, ஐரோப்பியப் பொருள்களுக்கான வரி 15 விழுக்காடாக நிர்ணயிக்கப்பட்டது.

ஆனால், அதற்குக் கைம்மாற்றாக பெரும்பாலான அமெரிக்க இறக்குமதிகள் மீதான வரியை நீக்குவதாக அளித்த வாக்குறுதியை ஐரோப்பிய ஒன்றியம் இதுவரை நிறைவேற்றவில்லை. இதனால் அதிபர் டிரம்ப் அதிருப்தியில் இருந்தார்.

இந்நிலையில், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அதன் உறுப்பு நாடுகளைச் சேர்ந்த பேராளர்கள் செவ்வாய்க்கிழமை (மே 19) கூடி விவாதித்தனர். நள்ளிரவைத் தாண்டியும் அந்தப் பேச்சுவார்த்தை நீடித்த நிலையில், அமெரிக்காவுடனான ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவது என உடன்பாடு எட்டப்பட்டது.

அந்த உடன்பாட்டை வரவேற்ற ஐரோப்பிய ஒன்றியத் தலைவர் உர்சுலா வோன் டெர் லெயன், அமெரிக்காவுடனான ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்தும் செயல்முறையை விரைந்து இறுதிசெய்யுமாறும் கேட்டுக்கொண்டார்.

“நாம் இணைந்து செயல்படுவதன் மூலம் நிலையான, கணிக்கவல்ல, சமச்சீரான, இருதரப்பிற்கும் பயனளிக்கக்கூடிய வணிக ஒப்பந்தத்தை உறுதிசெய்ய முடியும்,” என்று அவர் தமது சமூக ஊடகப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

இதன்மூலம், கடல்கடந்த இருதரப்பு வணிகம் தொடர்பில் கிட்டத்தட்ட ஓராண்டிற்கும் மேலாக நீடித்துவந்த மோதல்கள் முடிவிற்கு வரும் என நம்பப்படுகிறது.

அமெரிக்கா - ஐரோப்பிய ஒன்றியம் இடையிலான உடன்பாட்டிற்கு முன்பாக, எஃகு, அலுமினியம், கார் பாகங்கள் போன்றவற்றிற்கான வரியை அதிபர் டிரம்ப அதிரடியாக உயர்த்தி அறிவித்தார். அதனால், மற்ற நாடுகளுடனான தனது வணிகத் தொடர்புகளை வளர்த்துக்கொள்வதில் ஐரோப்பிய ஒன்றியம் முனைப்பு காட்டியது.

ஆயினும், தனது ஆகப் பெரிய வணிகப் பங்காளியான அமெரிக்காவுடனான 1.6 பில்லியன் யூரோ மதிப்பிலான (S$2.38 டிரில்லியன்) வணிக உறவை ஐரோப்பிய ஒன்றியம் புறக்கணித்துச் செயல்பட இயலாது.

குறிப்புச் சொற்கள்